மலேசிய மொழியும், ஆங்கிலத்தின் ஆதிக்கமும் – கி.சீலதாஸ்

மலேசிய மொழியை அரசு துறைகளில் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டப்பட்டால் அதைத் தண்டிக்க நடவடிக்கை எடுப்பதை ஆய்ந்துப் பார்க்க வேண்டுமென அரசின் தலைமை செயலாளர் டான் ஶ்ரீ சுக்கி அலி குறிப்பிட்டிருப்பது பலவிதமான கருத்துகளுக்கு இடமளித்துள்ளது.

ஒரு நாட்டில் எந்த மொழி முக்கியமான இடத்தை வகிக்க வேண்டும் என்ற சர்ச்சை அடிக்கடி எழுவது உண்டு. இதில் நிதானம் தேவை. மலேசிய மொழி தேசிய மொழி. எனவே, அதற்கு முறையான பாதுகாப்பும், மதிப்பும் கொடுக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்றபோதிலும் மலேசியா வணிகத்துக்கு முக்கியமளிக்கும் நாடு என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது.

இந்த வணிகக் கொள்கையை ஆழமாகச் சிந்திக்கும்போது  வெளிநாடுகளுடனான தொடர்பு அவசியமாகும்.  வணிகம் இருப்பதற்கு உதவுவது மொழி. வணிகத்தின் தொடர்பு மொழி ஆங்கிலம் என்பதை மறுப்பதற்கு இல்லை. வணிகத்துறையில் மட்டுமல்ல மற்றும் ஏனைய தொடர்புகளுக்கு ஆங்கிலம் உதவுகிறது. ஆசியான் வட்டாரத்தை எடுத்துக்கொண்டால் நம் அண்டை நாடான சிங்கப்பூர் ஆங்கிலத்துக்குச் சிறப்பான இடத்தை வழங்கியுள்ளது.

அதுபோலவே, பிலிப்பைன்ஸும் ஆங்கிலத்துக்குச் சிறப்பிடம் வழங்குகிறது; அந்த நாட்டு மக்கள் அவர்களின் தாய்மொழியைப் புறக்கணிக்காமல் செயல்படுவது மெச்சத்தக்கதாகும். சிங்கப்பூர் எல்லா இனத்தவர்களின் தாய்மொழிகளுக்கு மதிப்பளித்து கல்வி கொள்கையைக்  கொண்டிருக்கிறது. அங்கே மலாய் மொழி தேசிய மொழியாகவும் ஆங்கிலம், மலாய், சீனம், தமிழ் ஆகியன ஆட்சி மொழிகளாக இயங்குகின்றன. மலேசியா இதைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டுமென்று வலியுறுத்தப்படுவதை விவேகத்துடன் அணுக வேண்டும்.

சிங்கப்பூரும், பிலிப்பைன்ஸும் பல துறைகளில் மலேசியாவுடன் போட்டிப்போடும்  என்பதை ஒருபோதிலும் மறக்கக்கூடாது. மொழி உணர்வு தேவைதான். அதற்காக காலங்காலமாகப் பயன்படுத்தப்பெற்ற ஆங்கிலத்தைப் புறக்கணிப்பது விவேகமான போக்காகக் கருத இயலாது.

இத்தருணத்தில் மொழி பிரச்சினையைக் கிளப்பியிருப்பது அரசியல் இருக்கிறது என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது தவறான போக்கு.

அரசு துறைகளில் மலேசிய மொழியைப் பயன்படுத்தப்படாதவர்கள் தண்டனைக்குரியவர்கள் என்று சொல்வது உலக அனுபவ குறை அல்லது குறுகிய மனப்பான்மை என்றால் தகும். அரசு அலுவலகங்களில் மலாய் மொழி மட்டும்தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை மறைக்க முயலுவது கேலிக்கூத்தாகும்!

ஒரு காலத்தில் ஆங்கிலமே வேண்டாமென்றிருந்த சீனாவும் ஜப்பானும் இப்பொழுது அந்த மொழிக்கு மதிப்பளித்து கற்றுக்கொள்வதில் ஆர்வம் கொண்டிருப்பதைக் காண முடிகிறது. நம் நாட்டைப் பொறுத்தவரையில் சமீப காலம் வரை ஆங்கிலத்தில் மலேசியர்களின் புலமை மெச்சத்தக்கதாகவே இருந்தது.

இன்று அது ஒரு கடந்தகால நிகழ்வாக மாறிவிட்டது. அதே சமயத்தில், சில தனியார் நிறுவனங்களைப் பார்க்கும்போது அங்கே ஆங்கில மொழி புழக்கம் பரவலாக இருக்கிறது.

ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடக்கூடாது என்று சொல்லும்போது ஒரு முக்கியமான ஆபத்தையும் நாம் அறிந்திருக்க வேண்டும். இந்தியாவில் சமஸ்கிருதமும் உருதுவும் காண தவறிய ஒற்றுமையை ஆங்கிலம் கண்டது என்றார் தமிழறிஞர் கே.எஸ். பாலசுப்ரமணியம். இது ஏற்புடைய கருத்தாக இருப்பினும் அளவுக்கு அப்பாற்பட்ட ஆங்கில மோகம் பிற மொழி கொலைகளை நிகழ்த்தியது, நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்பது உண்மை அல்லவா?

கிறித்துவப் பாதிரியாரும், தமிழறிஞருமான ஜி.யு.போப் ஆங்கில மொழி மோகம் தமிழை அழித்துவிடும் என்ற எச்சரிக்கையைத் தமிழறிஞர்களும், தமிழ்ப் பிரியர்களும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

ஆங்கில மொழியின் உரிமையாளர்கள் – அவர்கள் பிற மொழிகளில் இருந்து சொற்களைக் கடன் வாங்கி தங்களாதாக்கிக் கொண்டார்கள். பிற நாடுகளில் ஊடுருவி ஆட்சிமுறையை மாற்றியதோடு மொழி ஆக்கிரமிப்பும் நடத்தினார்கள். அந்த மொழி ஆக்கிரமிப்பானது, தமிழ்மொழியை எடுத்துக்கொண்டால் பலத்த ஆங்கில ஊடுருவலுக்குப் பலியாகிவிட்டது.

இன்று சாதாரண பாமரன் கூட தன் தாய்மொழியில் பேசும்போது ஆங்கில சொற்களைப் பயன்படுத்துகிறான். தமது ஆங்கில மொழி புலமையை வெளிப்படுத்த தயங்குவதில்லை.

ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஆங்கில இலக்கியங்களைப் பார்த்தால் உரையாடலின் போது ஃபிரென்ச் சொற்களை, வாக்கியங்களைப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இவ்வாறு சாதாரண உரையாடலில் ஒருவன் ஃபிரென்ச் சொற்களைப் பயன்படுத்துவது நாகரீகமான, கவுரவமான தரத்தை வெளிப்படுத்துவதாகக் கருதப்பட்டது. அப்படிப்பட்ட நோய் தமிழர்களிடத்தில் இப்பொழுது காணலாம்.

தமிழ்ச் சினிமாவும் சரி, தமிழ்ப் படைப்புகளும் சரி ஆங்கிலத்துக்கு அடிமைப்பட்டு தங்களின் தாய்மொழியைப் புறக்கணிப்பது கேவலமான போக்கு, கேவலமான நாகரீகம் என்றால் பொருந்தும்.

பிற இனத்தவரோடு, பிற நாட்டவரோடு தொடர்புகொள்ள ஆங்கிலம் உதவும். ஆனால், வீட்டில் இருக்கும்போது, “வா.. வந்து சாப்பிடு!” என்று தாய்மொழியில் சொல்வதை விடுத்து ஆங்கிலத்தில் சொன்னால் இது நாகரீகமாகுமா?

இந்தப் பழக்கம் தமிழர்களிடத்தில் மட்டுமா? இல்லை! பிற மொழியினரிடமும் தொற்று நோய் போல பரவி வருவதைக் காணும்போது இவர்களின் தன்மானம் எங்கே என்று கேட்கத் தோன்றும். தமிழ்! தமிழ்! தமிழுக்காக உயிரைக் கொடுக்க தயங்கமாட்டேன் என்று சூளுரைக்கும் தமிழர்களிடத்தில் தமிழ் படும் பாடு எப்படி இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

சில கலை சொற்கள், பெரும்பான்மையான மருத்துவச் சொற்கள், சட்டச் சொற்கள், விஞ்ஞான அறிவு சொற்கள் தமிழில் இல்லை என்றால் அவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை.

ஆங்கிலத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளும்போது அதை தொடர்பு மொழியாக வைத்துக்கொள்வதில் குறை காண முடியாது. அறிவு வளர்ச்சி பெறவும், பகுத்தறிவு பண்பு ஆழமாகப் பதியவும் ஆங்கிலம் உதவும். அதைத் தவிர்ப்பது தவறு!

ஆனால், சொந்த உறவுகளிடமே காலையில் ‘குட் மோர்னிங்’, படுக்கப் போகும் வேளையில் ‘குட் நைட்’ எனச் சொல்வது அல்லது பழக்கத்தில் வைத்திருப்பது தேவைதானா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மலேசிய மொழி தேசிய உணர்வை, தேசிய ஒற்றுமையை வளர்க்க துணை நிற்கும். ஆங்கிலம் பொருளாதாரச் செழுமைக்கும், அறிவு வளம் பெறவும், மனிதத்துவம் பாதுகாக்கப்படவும் உதவும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஏனெனில், ஆங்கில மொழி உலக மொழியாகும். தொடர்பு மொழியாக உறுதிபடுத்தப்பட்டுவிட்டது. இவ்விரு மொழி நிலைகளைப் பிரித்தறிவது சிறப்பான அணுகுமுறையாகும்.