தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

தடுப்பூசி தான் நம்மை காக்கும் ஆயுதம், எனவே 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற முனைப்போடு அரசு செயல்பட்டு வருகிறது.

அரசின் சீரிய நடவடிக்கையால் கொரோனா பரவல் அதிகம் உள்ள முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இல்லை.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தாலும் சில மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் சில இடங்களில் சிறிதளவு தொற்றுகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே ஆரம்பத்திலேயே அதிகரிக்கவிடாமல் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒரே வழி தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது தான்.

தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்துவதற்காக மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை 29 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இது தவிர தினமும் அரசு ஆஸ்பத்திரிகளில் போடப்படுகிறது.

இதுவரை 11 கோடியே 19 லட்சத்து, 22 ஆயிரத்து 568 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதாவது 93.91 சதவீதம் பேர் முதல் தவணையும் 83.11 சதவீதம் பேர் 2-வது தவணையும் தடுப்பூசி போட்டுள்ளார்கள்.

இன்னும் 1 கோடியே 64 லட்சத்து 15 ஆயிரத்து 62 பேருக்கு தடுப்பூசி போட வேண்டி உள்ளது. அவர்கள் 42 லட்சத்து 54 ஆயிரத்து 238 பேர் முதல் தவணை தடுப்பூசியும், ஒரு கோடியே 21 லட்சத்து 60 ஆயிரத்து 824 பேர் 2-ம் தவணை தடுப்பூசியும் போடவில்லை.

தடுப்பூசி செலுத்துவதில் மெகா தடுப்பூசி முகாம்கள் நல்ல பலனை கொடுத்து உள்ளன. இதுவரை நடைபெற்ற 29 முகாம்கள் மூலம் மட்டும் 4 கோடியே 30 லட்சத்து 29 ஆயிரத்து 634 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்த வகையில் 30-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் தொடங்கி நடந்து வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம்கள் இரவு 7 மணி வரை நடக்கிறது

. மொத்தம் ஒரு லட்சம் இடங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னையில் மட்டும் 3,300 இடங்களில் நடக்கிறது. இன்று காலையில் ஆவடி மாநகராட்சி அருகில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகாமை தொடங்கி வைத்தார்.

அதை தொடர்ந்து திருநின்றவூர், தாமரைபாக்கம் காட்டுக்காலை, கன்னிகாபுரம் ஆகிய இடங்களில் நடந்த முகாம்களை பார்வையிட்டார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி இருக்கிறோம்.

அண்டை மாநிலங்களில் வேகமாக பரவி வருவதால் நாமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசின் சீரிய நடவடிக்கையால் கொரோனா பரவல் அதிகம் உள்ள முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இல்லை.

தடுப்பூசி தான் நம்மை காக்கும் ஆயுதம், எனவே 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற முனைப்போடு அரசு செயல்பட்டு வருகிறது. இன்றைய முகாமில் மக்கள் ஆர்வத்துடன் வருகிறார்கள். காலை 10 மணி நிலவரப்படி 84 ஆயிரத்து 267 பேர் ஊசி போட்டுக் கொண்டுள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 488 பேர் முதல் தவணையை போட்டுள்ளனர். 67 ஆயிரத்து 794 பேர் 2-ம் தவணையை போட்டு உள்ளார்கள். 4,985 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டு உள்ளனர். பொதுமக்கள் தாமாக முன்வந்து ஊசி செலுத்தி கொண்டு தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Malaimalar