அனைவருக்கும் கல்வி என்பதே திராவிட மாடல் அரசின் லட்சியம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக குழுக்கள் உருவாக்கப்பட்டு இருக்கும்.

ஒரு குழந்தை தனது ஐந்து வயதை அடைவதற்குள் 90 விழுக்காடு அளவுக்கு அதன் மூளை வளர்ந்து விடுகிறது என்று சொல்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டம் அழிஞ்சிவாக்கத்தில் எண்ணும்-எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- கொரோனா பெருந்தொற்றினால் பள்ளிகள் ஓராண்டுகளாக, ஏன் ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. அதனால் வகுப்பறையில் நேரடியாக கற்கும் வாய்ப்பை குழந்தைகள் பெற முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் கற்றலில் ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டது. அதனைக் குறைக்கவும், குழந்தைகளின் கற்றலை, அந்த ஆற்றலை அதிகப்படுத்தவும் ‘எண்ணும் எழுத்தும்’ என்ற இந்த முன்னோடித் திட்டம் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமான படிப்புகள் மட்டும் போதாது, புதிய உத்தி தேவை என்பதை அரசு உணர்ந்ததன் அடிப்படையில் தான், இந்தத் திட்டத்தை நாம் இன்றைக்கு வகுத்திருக்கோம்.

ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதற்காக ஒரு உயர்மட்டக் குழுவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் கல்வித்துறை சார்ந்த அலுவலர்களும், கல்வியாளர்களும் இருப்பார்கள். தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக குழுக்கள் உருவாக்கப்பட்டு இருக்கும். இவர்கள் தேசிய மற்றும் மாவட்ட அளவில் ஆலோசனைகளை நடத்தி இந்தத் திட்டத்தை சீர்செய்து, செழுமைப்படுத்துவார்கள்.

இது தொடர்பாக கருத்துக்கேட்பு கூட்டங்களும் நடத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கிறது. இதில் 92 ஆயிரத்து 386 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். இவர்கள் சொன்ன கருத்துகளை அடிப்படையாக வைத்தே ‘எண்ணும் எழுத்தும்’ இயக்கம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது.
ஒரு குழந்தை தனது ஐந்து வயதை அடைவதற்குள் 90 விழுக்காடு அளவுக்கு அதன் மூளை வளர்ந்து விடுகிறது என்று சொல்கிறார்கள்.

3 முதல் 5 வயதுக்குள் அதனுடைய சிந்தனை ஆற்றல் பெருகிவிடுகிறது. இந்தச் சிந்தனை ஆற்றல்தான் அந்தக் குழந்தையின் ஆளுமைத் திறனை தீர்மானிக்கிறது. எனவே, இத்தகைய தொடக்கப்பருவத்தில் கல்வியைத் தர வேண்டிய கடமை பெற்றோருக்கு உண்டு.

அதனைத்தாண்டி அரசுக்கும் உண்டு. அனைவருக்கும் கல்வி-அனைவருக்கும் உயர்கல்வி என்பதே இந்தத் திராவிட மாடல் அரசினுடைய இலட்சியமாக, கடமையாக அமைந்திருக்கிறது. ‘அனைவர்க்கும் கல்வி’ என்ற நோக்கத்திற்காகத்தான் திராவிட இயக்கமே உருவானது. திராவிட இயக்கத்தின் அடிப்படை நோக்கமான சமூகநீதி என்பதே கல்வித் தேவைக்காக உருவாக்கப்பட்டதுதான்.

ஒவ்வொரு குழந்தைக்கும் தொடக்கக் கல்வி மட்டும் ஒழுங்காக, முறையாகக் கிடைத்துவிட்டால், அதன் பிறகு நடப்பது அனைத்துமே சிறப்பாக நடக்கும். அதனால்தான், ‘திராவிட மாடல்’ அரசு ‘எண்ணும் எழுத்தும்’ என்ற இந்த இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறது, 2025-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் பிழையின்றி எழுதவும் படிக்கவும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது நம்முடைய இலக்கு! 2025-ஆம் ஆண்டுக்குள் எட்டு வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் எண்ணறிவு பெற்றவர்களாகத் திகழ வேண்டும் என்பது நம்முடைய இலக்கு! 2022-23-ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1, 2, 3 ஆகிய மூன்று வகுப்புகளில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 2025-ஆம் ஆண்டுக்குள் நாம் அடைய வேண்டிய இலக்கை நிச்சயம் அடைவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இன்று நடக்கும் தொடக்கவிழாவை விட, மூன்று ஆண்டுகள் கழித்து நடக்க இருக்கும் வெற்றிவிழாவையும் நான் முக்கியமாகக் கருதுகிறேன். கல்வி மட்டும்தான் நம் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும்.

படிக்காமல் சாதித்த ஒருவரை யாராவது எடுத்துக்காட்டாகக் காட்டினால், அதற்கு இணையாகப் படித்துச் சாதித்தவர்கள் லட்சம் பேரை நாம் காட்டமுடியும்! ‘படிக்காமலே சாதிக்கலாம்’ என்று யாராவது சொன்னால், அது தன்னம்பிக்கை ஊட்டுவது அல்ல; அது வெறும் ஆசை வார்த்தை! இவர்களெல்லாம் படித்து முன்னேறுகிறார்களே என்ற எரிச்சலில் தவறான பாதையை கை காட்டும் சூழ்ச்சி அது! எனவே, குழந்தைகள்-பள்ளிப் பிள்ளைகள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள் என்பது படிப்பு-படிப்பு-படிப்பு மட்டும்தான். இதனை முதலமைச்சராக அல்ல-ஒரு தந்தையாக உங்களில் ஒருவனாக இருந்து நான் கேட்டுக் கொள்கிறேன். “எண்ணும் எழுத்தும்” இந்த ஆட்சியின் கண்ணும் கருத்தும் என்பதைச் சொல்லி விடைபெறுகிறேன்.

முன்னதாக விழாவுக்கு வந்தமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டானுக்கு மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. வெள்ளி செங்கோல் வழங்கினார். விழாவில் எம்.எல்.ஏக்கள் கே.பி.சங்கர், துரை சந்திரசேகர், கிருஷ்ணசாமி, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு, தலைமை செயற்குழு உறுப்பினர் குறிஞ்சி கணேசன், நிர்வாகிகள் எம்.வி.குமார், ஆர்.எஸ்.சம்பத், ரா.குமரேசன், ஆர்.சாந்தி பக்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Malaimalar