உயரம் தாண்டுதலில் தமிழக வீராங்கனை கிரேசினா மெர்லி முதலிடம் பிடித்தார் டிரிபிள் ஜம்ப் போட்டியில் கர்நாடகா வீராங்கனை புதிய தேசிய சாதனை தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் எஸ்.என்.ஜே. நிறுவனம் ஆதரவுடன் 61-வது மாநிலங்கள் பங்கேற்றுள்ள தேசிய சீனியர் தடகள போட்டிகள் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீராங்கனை கிரேசினா மெர்லி 1.82 மீட்டர் உயரம் தாண்டி முதலிடம் பிடித்ததுடன் தங்கப்பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சி. கனிமொழி தங்கப்பதக்கம் பெற்றார். இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு தமிழக வீராங்கனை பி.எம்.தபிதா வெண்கல பதக்கம் பெற்றார்.
ஆண்களுக்கான 4X100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழரசு, இலக்கியதாசன், விக்னேஷ், சிவக்குமார் ஆகியோர் அடங்கிய தமிழக அணி தங்கம் வென்றது.
டிரிபிள் ஜம்ப் போட்டியில் கர்நாடக வீராங்கனை ஐஸ்வர்யா 14.14 மீட்டர் தூரம் தாண்டி புதிய தேசிய சாதனை படைத்ததுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு கேரள வீராங்கனை மயூகா ஜானி 14.11 மீட்டர் தூரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை ஜஸ்வர்யா நேற்று தகர்த்தார். வட்டு எறிதலில் பஞ்சாப் வீராங்கனை நவ்ஜீத் கவுர் (55.67 மீட்டர்) தங்கப்பதக்கமும், அரியானா வீராங்கனை நிதி ராணி (50.86 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், தமிழக வீராங்கனை காருண்யா (49.24 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் வென்றனர்
Malaimalar