மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம்

ராணுவத்தை ஒரு சேவையாக பார்க்கும் தங்களின் லட்சியக் கனவுகளை களைக்கும் விதமாக அக்னிபத் திட்டம் உள்ளது. ராணுவத்தில் சேர வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

இந்திய ராணுவத்தில் அக்னிபத் என்கிற 4 ஆண்டு பணிப்புரியும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தில் 17 வயது முதல் 21 வயதுடைய இளைஞர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் நிரந்தர ஊதியத்தில் பணியில் சேரலாம்.

4 ஆண்டுகளுக்கு பிறகு தகுதியின் அடிப்படையில் ஆட்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நிரந்தரப்பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவில் ராணுவத்திற்கு இளைஞர்கள் செல்கின்றனர்.

ராணுவத்தில் சேர வேண்டும் என்ற முனைப்புடன் தீவிரமாக தங்களை தயார்படுத்தி வருகின்றனர். ராணுவத்தை ஒரு சேவையாக பார்க்கும் தங்களின் லட்சியக் கனவுகளை களைக்கும் விதமாக இந்த திட்டம் இருப்பதாக இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதனால், அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யும்படியும், இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராணுவ தேர்வை நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

Malaimalar