இணைய பாதுகாப்பு இல்லாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியம் இல்லை: அமித்ஷா

தேச பாதுகாப்புடன் இணைய பாதுகாப்பு பின்னி பிணைந்துள்ளது. பிரதமர் மோடியின் நோக்கம், ஒவ்வொருவருக்கும் தொழில்நுட்பரீதியாக அதிகாரம் அளிப்பதுதான். தற்போது 80 கோடி இந்தியர்கள் ஆன்லைன் பயன்படுத்துகிறார்கள்.

டெல்லியில், ‘இணைய பாதுகாப்பு மற்றும் தேச பாதுகாப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

அதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- இணைய (சைபர்) பாதுகாப்பு எவ்வளவு முக்கியம் என்று நமக்கு தெரியும். இணைய பாதுகாப்பு இல்லாமல் இந்தியாவின் முன்னேற்றம் சாத்தியம் இல்லை. தேச பாதுகாப்புடன் இணைய பாதுகாப்பு பின்னி பிணைந்துள்ளது.

அதை வலுவானதாக மாற்ற மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. இணைய வெளியை தவறாக பயன்படுத்துவது புதிதல்ல என்பது நம் அனைவருக்கும் தெரியும். கிருமி தாக்குதல், தரவு திருட்டுகள், ஆன்லைன் பொருளாதார மோசடிகள், குழந்தை ஆபாச படங்கள் என இணையம் தவறாக பயன்படுத்தப்படுகின்றன.

வரும் நாட்களில் இது இன்னும் அதிகரிக்கும். கடந்த 2012-ம் ஆண்டு, மொத்தம் 3 ஆயிரத்து 377 இணைய குற்றங்கள்தான் பதிவு செய்யப்பட்டன. ஆனால், 2020-ம் ஆண்டு இது 50 ஆயிரமாக உயர்ந்து விட்டது. பதிவு செய்யப்படாத குற்றங்கள் லட்சக்கணக்கில் இருக்கும்.

உலகத்திலேயே மிகவும் பாதுகாப்பான இணைய சூழ்நிலையை உருவாக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். 3 ஆண்டுகளுக்கு முன்பு, இணைய குற்றங்கள் புகார் இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தொடங்கியது.

அதில் இதுவரை 11 லட்சம் இணைய குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2 லட்சம் சமூக வலைத்தள புகார்களும் பதிவாகி இருக்கின்றன. தற்போது 80 கோடி இந்தியர்கள் ஆன்லைன் பயன்படுத்துகிறார்கள். டேட்டா கட்டணம் குறையும்போது இன்னும் நிறைய பேர் பயன்படுத்துவார்கள்.

தொழில்நுட்பம் காரணமாக, 130 கோடி இந்தியர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் நேரடியாக பணப்பலன் பெறுகிறார்கள். இந்தியா போன்ற நாட்டில் இது பெரிய புரட்சி. ஏனென்றால், 2014-ம் ஆண்டுக்கு முன்பு, 60 கோடி குடும்பங்களிடம் வங்கிக்கணக்கே இல்லை. பலன்களை பெற மக்கள் அங்குமிங்கும் ஓட வேண்டி இருந்தது.

லஞ்சம் கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால், இப்போது ஒரு பட்டனை தட்டினால், 13 கோடி குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தலா ரூ.6 ஆயிரத்தை பரிமாற்றம் செய்து விடுகிறார். இது மிகப்பெரிய வளர்ச்சி. அதே சமயத்தில், இணைய மோசடிகளில் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டிய பெரிய சவாலும் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Malaimalar