கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 2 மாதம் நீடிக்கும் அறிகுறி- ஆய்வில் தகவல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 வயது வரை உள்ள குழந்தைகளில் 40 சதவீதம் பேர் 2 மாதங்களுக்கு மேலாக அறிகுறிகளை அனுபவித்துள்ளனர். 4 முதல் 11 வயதுக்குட்பட்டவர்களில் 38 சதவீதம் பேரும், 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 41 சதவீதம் பேரும் நீண்ட கால அறிகுறியை அனுபவித்துள்ளனர்.

கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் தொடர்ந்து உருவாகி கொண்டே இருக்கின்றன. தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், தொற்றின் வீரியம் குறைவாக உள்ளது. அதே நேரம் கொரோனா உருமாறி புதிய வகைகளில் பரவி கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தொற்றின் அறிகுறிகள் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக ‘லேன்செட் சைல்டு அன்ட் அடோல்ஸ்சென்ட் ஹெல்த்’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வு டென்மார்க்கில் உள்ள குழந்தைகளிடம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதாவது நீண்ட கால அறிகுறிகள் குழந்தைகளிடையே தொற்று இருப்பதை குறிப்பதாகவும், இது போன்ற பிரச்சினைகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியத்தை எழுப்புவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து வயதினருக்கும் 2 மாதங்கள் அல்லது அதற்கு மேலாக குறைந்தபட்சம் ஒரு அறிகுறி காணப்படுவது ஆய்வில் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 3 வயது வரை உள்ள குழந்தைகளில் 40 சதவீதம் பேர் 2 மாதங்களுக்கு மேலாக அறிகுறிகளை அனுபவித்துள்ளனர்.

4 முதல் 11 வயதுக்குட்பட்டவர்களில் 38 சதவீதம் பேரும், 12 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 41 சதவீதம் பேரும் நீண்ட கால அறிகுறியை அனுபவித்துள்ளனர்.

 

Malaimalar