குஜராத்தில் மாற்றம்- அரசு பள்ளிகளுக்கு படையெடுக்கும் தனியார் பள்ளி மாணவர்கள்

தகுதியான ஆசிரியர்கள் மூலம் தரமான கல்வி வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டதால், ஆறு தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலத்தில் புதிய மாற்றமாக தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் சேர்ந்து வருகின்றனர். குஜராத் அரசின் தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, மாநிலம் முழுவதும் 2018-19 ஆண்டில் 33,822மாணவர்களும், 2019-20 ஆண்டில் 31,382 மாணவர்களும் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு இடமாறியுள்ளனர்.

பனஸ்கந்தா மாவட்டத்தில் மட்டும் 2,969 தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

இந்த மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் வசதிகள் மேம்படுத்தப்பட்டதால், இந்த ஆண்டு, ஆறு தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளிகளின் தரம் கணிசமாக உயர்ந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

தகுதியான ஆசிரியர்கள் மூலம் தரமான கல்வி வழங்கப்படுவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கல்வி உதவித் தொகைகள் வழங்கப்படுவது, உணவு, டிஜிட்டல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், நூலகம் உள்ளிட்ட வசதிகள், பெற்றோரை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை மாற்றுவதற்கு தூண்டியது என்று, உத்தம்புரா தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கமலேஷ் தக்கர் கூறியுள்ளார்.

அகமதாபாத் நகரில் மட்டும் கடந்த ஏழு ஆண்டுகளில், 40,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

2021-22 கல்வியாண்டில், மாநிலம் முழுவதும் உள்ள 32,000க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளில் கிட்டத்தட்ட 61,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

 

Malaimalar