விவசாயிகளின் உரத்தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டின் உரத்தேவையில் 32 சதவிகிதத்திற்கு மேல் மெட்ராஸ் உரத்தொழிற்சாலை விநியோகிக்கிறது.
மத்திய சுகாதாரம் குடும்பநலம் மற்றும் ரசாயன உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று சென்னை மணலியில் உள்ள மெட்ராஸ் உரத்தொழிற்சாலையை பார்வையிட்டார்.
அந்த ஆலையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்த அவர், நமது விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஆலை நிர்வாகத்தை அறிவுறுத்தினார்.
தமிழ்நாட்டின் உரத்தேவையில் 32 சதவிகிதத்திற்கு மேல் மெட்ராஸ் உரத்தொழிற்சாலை வெற்றிகரமாக விநியோகித்திருப்பதாக குறிப்பிட்ட அவர், நடப்பு கரீஃப் பருவத்தில் 4.5 லட்சம் மெட்ரிக் டன் வேம்பு கலந்த யூரியா உரத்தை விநியோகித்திருப்பதாக கூறினார்.
இந்தியாவில் உரப்பயன்பாட்டு முறையை மாற்றியமைக்கும் விதமாக, நானோ உர உற்பத்திக்கான வாய்ப்புகளில் கவனம் செலுத்துமாறும், தமிழகம் மற்றும் பிற மாநில விவசாயிகளின் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் மெட்ராஸ் உரத் தொழிற்சாலை நிர்வாகத்தை மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார்.
முன்னதாக சென்னை சேத்துப்பட்டில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர்- கீழ் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அங்குள்ள மாதிரி சேகரிப்பு மையம், அதிநவீன ஆய்வு மையம் ஆகியவற்றை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் மாண்டவியா கேட்டறிந்தார். தொடர்ந்து, அதிகாரிகளுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் காசநோய் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் மருத்துவர்களை பாராட்டிய அமைச்சர், காசநோய் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து, காசநோய் குறித்த அறிக்கை அடங்கிய புத்தகத்தை மந்திரி மாண்டவியா வெளியிட்டார். இந்த நிகழ்வில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழக சுகாதாரத்துறை செயலர் மரு. செந்தில்குமார் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
Malaimalar