கவுகாத்தி ஓட்டலில் சிவசேனாவின் 8 மந்திரிகள் உள்பட அந்த கட்சியை சேர்ந்த 39 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு வாரமாக இழுபறி நீடித்து வந்த மகாராஷ்டிரா அரசியலில் இனி அடுத்தடுத்த புதிய திருப்பங்களை எதிர்பார்க்கலாம். மும்பை: மகாராஷ்டிராவில் 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது பா.ஜனதா-சிவசேனா கூட்டணி கட்சிகள் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றன.
ஆனால் தேர்தலுக்கு பின்னர் தனது இந்துத்வா கொள்கைக்கு முரணான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அரசை அமைத்து சிவசேனா அரசியல் அரங்கை அதிர வைத்தது. கட்சிக்கு எதிராக திரும்பிய எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி பதவியை பா.ஜனதா தங்களுக்கு 2½ ஆண்டுகள் விட்டு தர மறுத்ததால், சிவசேனா இந்த தடாலடி நடவடிக்கையை மேற்கொண்டது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபையில் ஆளும் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் பலம் சிவசேனா- 55, தேசியவாத காங்கிரஸ்- 53, காங்கிரஸ்- 44 என்ற நிலையில், பா.ஜனதா வசம் மட்டும் அதிகபட்சமாக 106 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், கூட்டணி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்து வருவதாக கூறப்பட்டது.
இந்தநிலையில் மராட்டியத்தில் கடந்த 20-ந் தேதி இரவில் பரபரப்பு அரசியல் திருப்பம் ஏற்பட்டது. சிவசேனாவின் பெரும்பாலான எம்.எல். ஏ.க்கள் கட்சி தலைமைக்கு எதிராக திரும்பினர். அவர்கள் இரவோடு, இரவாக குஜராத் மாநிலம் சூரத் சென்று, பின்னர் அசாம் மாநிலம் கவுகாத்திக்கு விரைந்து அங்குள்ள ஓட்டலில் முகாமிட்டனர். தற்போது, அந்த ஓட்டலில் சிவசேனாவின் 8 மந்திரிகள் உள்பட அந்த கட்சியை சேர்ந்த 39 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தி அணிக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் குடும்ப விசுவாசியாக இருந்த மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமை தாங்குகிறார். அவர்கள் பா.ஜனதாவுடன் சேர்ந்து கூட்டணி அரசு அமைக்க வேண்டும் என்று சிவசேனா தலைமையை தொடர்ந்து வலியுறுத்தினர்.
ஆனால் அவர்களின் கோரிக்கையை நிராகரித்த உத்தவ் தாக்கரே, தனது அரசை கப்பாற்ற ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இது தொடர்பாக சிவசேனா அனுப்பிய கடிதத்தை ஏற்று அந்த எம்.எல்.ஏ.க்களுக்கு கடந்த சனிக்கிழமை சட்டசபை செயலாளர் மூலம் துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். அதில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்ற கேள்வியுடன் நேற்று மாலை 5.30 மணிக்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் தங்களை தகுதிநீக்கம் செய்ய அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “துணை சபாநாயகர் நர்ஹரி ஜர்வாலுக்கு எதிராக நாங்கள் அளித்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வதில் முடிவு எடுக்க அவருக்கு அதிகாரம் இல்லை. மேலும் சிவசேனாவின் சட்டமன்ற குழு தலைவராக அஜய் சவுத்திரியை நியமித்த துணை சபாநாயகரின் முடிவு சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்
சித்தராமையா குற்றச்சாட்டு தங்களது அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மகாராஷ்டிரா அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரப்பட்டு இருந்தது. மேலும் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆதரவை தாங்கள் திரும்பபெறுவதாகவும், அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகவும் அவர்கள் மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்ய காந்த், ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய கோடைக்கால விடுமுறை அமர்வு நேற்று விசாரித்தது.
விசாரணையின்போது அதிருப்தி சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் நீரஜ் கிஷன் கவுல், “துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வாலை நீக்க கோரும் தீர்மானம் நிலுவையில் இருக்கும்போது, எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் கோரும் விவகாரத்தில் அவரால் முடிவு எடுக்க முடியாது” என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மனுதாரர்கள் ஏன் மும்பை ஐகோர்ட்டை நாடவில்லை என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த வக்கீல் நீரஜ் கிஷன் கவுல், “காலம் மிகக்குறைவாக உள்ளது. பலம் கொண்ட சிவசேனா, மனுதாரர்களின் வீடுகளை தாக்கி அரசு எந்திரத்தை முடக்கி வருகிறது. மனுதாரர்கள் அசாமில் எருதுகளை போல கொல்லப்பட்டு, 40 உடல்கள் மட்டும் மும்பை திரும்பும் என அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
மும்பையில் மனுதாரர்களுக்கு உகந்த பாதுகாப்பு சூழல் இல்லை” என வாதிட்டார். ஆனால் சிவசேனா சட்டமன்ற குழு தலைவர் அஜய் சவுத்திரி மற்றும் தலைமை கொறடா சுனில் பிரபு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, “2020-ம் ஆண்டு ராஜஸ்தான் ஐகோர்ட்டை தவிர, சபாநாயகரின் நடவடிக்கைகளில் இதுவரை கோர்ட்டு தலையிடவில்லை” என வாதிட்டார்.
மேலும் சிவசேனா சட்டமன்ற குழு தலைவர் அஜய் சவுத்திரி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் தேவ்தத் காமத், இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது, தகுதி நீக்க நடவடிக்கைகளுக்கு இதுவரை கோர்ட்டு தடை விதித்தது இல்லை என கூறினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேரையும் தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.
தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். மேலும் ரிட் மனு தொடர்பாக 5 நாட்களுக்குள் பதில் அளிக்க மகாராஷ்டிரா சட்டமன்ற செயலாளர், துணை சபாநாயகர், சட்டமன்ற குழு தலைவர் அஜய் சவுத்திரி, சிவசேனா தலைமை கொறடா சுனில் பிரபு மற்றும் மகாராஷ்டிரா அரசு, மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
தகுதி நீக்க நோட்டீஸ் தொடர்பாக அதிருப்தி அணியினர் விளக்கம் அளிப்பதற்கான காலக்கெடுவை ஜூலை 12-ந் தேதி மாலை 5.30 மணி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் முக்கியமாக சட்டசபையில் பலப்பரீட்சை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நிராகரித்தனர். இது தேவையற்ற சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என்று கருத்து தெரிவித்த அவர்கள், இந்த விஷயத்தில் சட்டவிரோதமாக எதுவும் நடந்தால், அப்போது கோர்ட்டை அணுகலாம் என்று கூறினர். இது தவிர அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர், அவர்களின் சொத்துகளுக்கும் மகாராஷ்டிரா அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 11-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். சுப்ரீம் கோர்ட்டின் இந்த இடைக்கால தீர்ப்பை கவுகாத்தி ஓட்டலில் முகாமிட்டுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது பாலாசாகேப் தாக்கரேயின் (பால் தாக்கரே) இந்துத்வாவுக்கு கிடைத்த வெற்றி என ஏக்நாத் ஷிண்டே வலைதளத்தில் பதிவிட்டார். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, அதிருப்தி அணிக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில், அந்த அணியுடன் சேர்ந்து பா.ஜனதா ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டும் என்று கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மும்பையில் பா.ஜனதா முன்னாள் முதல்-மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே அசாமில் முகாமிட்டுள்ள அதிருப்தி அணியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் மும்பை வர உள்ளதாகவும், அவர்கள் கவர்னரை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வாரத்திற்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேக்கு கவர்னர் உத்தரவிடுவார் என்று கூறப்படுகிறது. சட்டசபையில் பலப்பரீட்சை நடைபெறும் பட்சத்தில் உத்தவ் தாக்கரே அரசு தோற்கடிக்கப்பட்டு கவிழ்வதற்கான சாத்தியகூறுகள் நிலவுகிறது. இதனால் அவரது அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே ஒரு வாரமாக இழுபறி நீடித்து வந்த மகாராஷ்டிரா அரசியலில் இனி அடுத்தடுத்த புதிய திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.