பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கிய கல்வி முறை இந்திய கல்வி முறையாக இருக்க முடியாது- பிரதமர் மோடி

தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படை அம்சமே, குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளி வருவதுதான். குழந்தைகளை திறனுடையவர்களாக மாற்றுவதில் தான், முழு கவனமும் செலுத்தப் படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, வாரணாசில் தேசிய கல்விக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான அகில இந்திய கல்வி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கல்வி மாநாட்டில், தேசிய கல்விக்கொள்கையின் கீழ் அடையாளம் காணப்பட்ட 9 அம்சங்கள் குறித்து குழு விவாதங்கள் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படை அம்சமே, கல்வியை குறுகிய மனப்பான்மையிலிருந்து வெளிக்கொண்டு வருவதோடு, 21-ம் நூற்றாண்டுக்கான நவீன சிந்தனைகளுடன் இணைப்பது தான் என்று தெரிவித்தார்.

பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்ட கல்வி முறை ஒருபோதும் இந்திய கல்விமுறையாக இருக்க முடியாது என்று பிரதமர் கூறினார்.

நமது கல்வி முறை இளைஞர்களை பட்டதாரிகளாக மட்டும் உருவாக்காமல், நாடு முன்னோக்கிச் செல்வதற்கு உதவுபவர்களாக இருக்கும் வகையில் உதவ வேண்டும் என்றும், நமது ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்த உறுதிப்பாட்டிற்கு தலைமையேற்க வேண்டும் என பிரதமர் கூறினார்.

குழந்தைகளை அவர்களது திறமை மற்றும் விருப்பத்திற்கேற்ற திறனுடையவர்களாக மாற்றுவதில் தான், புதிய கல்விக்கொள்கை முழு கவனமும் செலுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார். நமது இளைஞர்கள் திறன் பயிற்சி பெற்றவர்களாக, நம்பிக்கை உடையவர்களாக, நடைமுறைகளுக்கு உகந்தவர்களாக திகழ்வதற்கான அடித்தளத்தை கல்விக்கொள்கை உருவாக்குகிறது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

mm