ரூ.4,389 கோடி சுங்க வரி ஏய்ப்பு- ஓப்போ இந்தியா நிறுவனத்துக்கு நோட்டீஸ்

இறக்குமதி செய்யப்பட்ட சில பொருட்களின் விலையை தவறாக குறிப்பிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசாரணை அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாக ஓப்போ இந்தியா தெரிவித்துள்ளது.

சீனாவின் குவாங்டன் ஓப்போ கைபேசி தொலைத்தொடர்பு கழக நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓப்போ இந்தியா, 4,389 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளதை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கண்டுபிடித்துள்ளது.

இந்தியா முழுவதும் உற்பத்தி, வடிவமைத்தல், மொத்த வியாபாரம், கைபேசி மற்றும் உதிரி பாகங்கள் விநியோகம் உள்ளிட்டவற்றில் ஓப்போ இந்தியா ஈடுபட்டுள்ளது. ஒன் பிளஸ் மற்றும் ரியல்மி உள்ளிட்ட பல்வேறு கைபேசி நிறுவனங்களுடன் ஓப்போ இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில், ஓப்போ இந்திய அலுவலகம், அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கைபேசி உற்பத்தி செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்ட சில பொருட்களின் விலையை ஓப்போ இந்தியா நிறுவனம் தவறாக குறிப்பிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓப்போ இந்தியா 4,389 கோடி ரூபாய் அளவுக்கு வரி விலக்கு பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் மூத்த நிர்வாக பணியாளர்கள் மற்றும் உள்ளூர் விநியோகஸ்தர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அவர்கள் இறக்குமதியின்போது சுங்க அதிகாரிகளிடம் தவறான தகவலை அளித்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

சுங்க வரியை செலுத்தும்படி ஓப்போ இந்தியா நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஓப்போ இந்தியா நிறுவனம், வருவாய் புலனாய்வு துறையிடம் இருந்து பெறப்பட்ட நோட்டீசுக்கு உரிய பதில் அளிப்பதாகவும், விசாரணையில் ஈடுபட்டுள்ள அரசு அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் சட்டப்பூர்வ தீர்வுகள் உள்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஓப்போ இந்தியா கூறி உள்ளது.

 

mm