உலமாக்களுக்கு பென்சன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை விண்ணப்பித்த 1,600 பேருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவிலில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சிறுபான்மை நலத்துறை சார்பில் அனைத்து மக்களுக்கும் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 200 முதல் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதுவரை 12 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ உதவும் சங்கங்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மற்றும் பள்ளிவாசல்களை சீரமைக்க தலா 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 70-க்கு மேற்பட்ட பள்ளிவாசல்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ ஆலயங்களை பராமரிக்க இதுவரை 1.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வகுப்பு வாரியத்தில் 150-க்கு மேற்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளதாக தெரிய வந்தது. இது தொடர்பாக ஆய்வு செய்து 100-க்கு மேற்பட்ட இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் கையகப்படுத்தப்பட்டு வக்பு வாரியத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சொத்துக்களை மீட்கும் போது பள்ளிவாசலுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் இதற்கு வரவேற்பு உள்ளது.
உலமாக்களுக்கு பென்சன் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதுவரை விண்ணப்பித்த 1,600 பேருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. உலமாக்கள் இறந்துவிட்டால் அவர்கள் மனைவிக்கு பென்சன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாதம் முதல் உலமாக்கள் மாத உதவி தொகை பெறுபவர்கள் இறந்து விட்டால் அவரது குடும்பத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் உலமாக்கள் உதவி தொகை பெற விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பங்களை பரிசீலித்து உடனடியாக உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மீற முடியாது.
வக்பு வாரியத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே அரசு தலையிட முடியும். திராவிட மாடல் ஆட்சியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.
-mm