பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ஒரே நோக்கம் தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதே. நேரடிப் போர்களில் தோல்வியை சுவைத்த பாகிஸ்தான், மறைமுகப் போரின் பாதைக்கு மாறியது.
ஜம்முவில் நடந்த கார்கில் வெற்றி தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேச சேவையில் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் ஆயுதப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஒரே நோக்கம் தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதே. அனைத்து வகையான எதிர்காலப் போர்களிலும் போராட ஆயுதப் படைகளுக்கு ஆயுதங்கள், உபகரணங்களைத் தயாரிக்கும் தற்சார்பு சூழலை உருவாக்க தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
இந்தியா ஒரு வலிமையான மற்றும் நம்பிக்கையான தேசமாக மாறியுள்ளது. புதிய இந்தியா, தீய நோக்கம் கொண்ட எவருக்கும் தகுந்த பதிலடி கொடுக்க தயாராக உள்ளது.
இந்தியாவை உலக வல்லரசாக மாற்றுவதே எங்கள் நோக்கம். வலிமையான, வளமான, தன்னம்பிக்கை மற்றும் வெற்றிகரமான இந்தியாவை உருவாக்குவதே, உயர்ந்த தியாகத்தைச் செய்த நமது மாவீரர்களுக்கு செய்யும் பொருத்தமான அஞ்சலியாக இருக்கும்.
1965 மற்றும் 1971 நேரடிப் போர்களில் தோல்வியை சுவைத்த பாகிஸ்தான், மறைமுகப் போரின் பாதைக்கு மாறியது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அது இந்தியா மீது மறைமுக யுத்தத்தை மேற்கொண்டது. ஆனால், இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை யாராலும் சீர்குலைக்க முடியாது என்பதை மீண்டும் மீண்டும், நமது துணிச்சலான வீரர்கள் நிரூபித்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-mm