காங்கோவில் இந்திய வீரர்கள் உயிரிழந்த விவகாரம் – ஐ.நா. பொது செயலாளருடன் பேசிய பிரதமர் மோடி

காங்கோ நாட்டில் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா.படையில் பி.எஸ்.எப்.வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரங்கல்.

காங்கோ நாட்டில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் பணிகளுக்காக ஐ.நா. படை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்தப் படையில் இந்தியாவைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இதற்கிடையே, காங்கோ நாட்டின் வடகிழக்கே உள்ள புடெம்போ நகரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்கார்கள் தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த இந்திய பி.எஸ்.எப். படைவீரர்கள் இருந்த பகுதியை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதில் 2 இந்திய வீரர்கள் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். இதற்கு காங்கோ அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்கவேண்டும். இந்த மூர்க்கத்தனமான தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

காங்கோவில் இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி திருமூர்த்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. செயலாளர் அண்டோனியோ குட்டரெசுடன் தொலைபேசியில் பேசினார். காங்கோவில் இந்திய வீரர்கள் உயிரிழந்தது குறித்து பேசிய அவர், இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்தும்படி வலியுறுத்தினார்.

 

-mm