ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம்- மத்திய மந்திரி தகவல்

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூர், சென்னை விமான நிலையத்தில் இருந்து 57 கி.மீ. தொலைவில் இருக்கிறது. புதிய விமான நிலையத்தின் மூலம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பயனடைவார்கள்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விமானங்கள், 400-க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான பயணிகளின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க மத்திய விமான போக்குவரத்து ஆணையம் முடிவு செய்தது. இதற்காக சுங்குவார்சத்திரம் அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பன்னூர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூர் மற்றும் திருப்போரூர், படாளம் ஆகிய 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

இதுதொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை, தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டெல்லியில் சந்தித்தும் பேசினார். இந்தநிலையில் டெல்லி மாநிலங்களவையில் பேசிய தி.மு.க. எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, ‘சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய பசுமை விமான நிலையம் சென்னையில் அமைய திட்டம் இருக்கிறதா? அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?’ என்ற கேள்விகளை முன்வைத்தார்.

இதற்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி வி.கே.சிங் அளித்த பதில் வருமாறு:- புதிதாக விமான நிலையங்களை அமைக்க விரும்பும் மாநில அரசோ, தனியார் நிறுவனமோ அதுதொடர்பான திட்ட அறிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறைக்கு அனுப்ப வேண்டும். அப்படி வரப்பெற்ற விண்ணப்பங்களுக்கு, அந்த இடத்துக்கான அனுமதி, கொள்கை அளவிலான அனுமதி என 2 அனுமதிகளை அந்த அமைச்சகத்திடம் இருந்து பெற வேண்டும். அந்த அனுமதிகளை பெற்ற பின்னர் விமான நிலையம் அமைப்பதற்கான நிதியை திரட்ட வேண்டியது அந்த நிறுவனம் அல்லது சம்பந்தப்பட்ட மாநில அரசின் பொறுப்பாகும்.

அந்த வகையில் சென்னைக்கு அருகில் புதிதாக பசுமை விமான நிலையம் அமைப்பதற்காக 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து, ஆய்வு மேற்கொள்ள இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை கேட்டுக்கொண்டது.

இதில் பரந்தூர் மற்றும் பன்னூர் என 2 இடங்களை ஆணையம் தேர்வு செய்து, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்துக்கு தெரியப்படுத்தியது. அதனைத்தொடர்ந்து பரந்தூர் இறுதியாக முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பரந்தூரில் விமான நிலையம் அமைக்க இட அனுமதி வழங்கும்படி மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு தமிழக அரசு கடிதம் அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் தொடங்கும்.

மேலும் ‘உடான்’ திட்டத்தின் கீழ் மண்டலங்களை இணைக்கும் வகையில் தமிழகத்தில் நெய்வேலி, தஞ்சை, ராமநாதபுரம் மற்றும் வேலூர் ஆகிய 4 விமான நிலையங்களை தரம் உயர்த்தவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூர், சென்னை விமான நிலையத்தில் இருந்து 57 கி.மீ. தொலைவில் இருக்கிறது. பரந்தூரில் 4,800 ஏக்கரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்தின் மூலம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த மக்களும் பயனடைவார்கள். இந்தநிலையில் விளை நிலங்கள், தொழிற்சாலைகள், மக்கள் வசிக்கும் பகுதிகள், நிலத்தை கையகப்படுத்த ஆகும் செலவு என பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் புதிய விமான நிலையம் அமைவதற்கு, பரந்தூர் தேர்வாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

-mm