நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்- டெல்லியில் ராகுல், பிரியங்கா கைது

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் திரண்டனர். காங்கிரசின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் திரண்டனர்.

ராகுல்காந்தி, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களும் காலையிலேயே கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கைகளில் கறுப்பு பட்டை அணிந்திருந்தனர். காங்கிரசின் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தடையை மீறி காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டர்கள் சாலைகளில் அமர்ந்து தர்ணா செய்தனர்.

பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க சென்ற ராகுல்காந்தி கறுப்பு சட்டை அணிந்து இருந்தார். அதேபோல் காங்கிரஸ் எம்.பி.க்களும் கறுப்பு நிறத்திலான ஆடைகளை அணிந்து இருந்தனர். பின்னர் பாராளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் போராட்டம் நடந்தது.

பின்னர் காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகையை நோக்கி ராகுல் காந்தி தலைமையில் பேரணியாக சென்றனர். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தினர். பேரணிக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர். ஆனால் காங்கிரசார் முன்னேறி செல்ல முயன்றனர்.

இதையடுத்து ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். அதேபோல் பிரியங்கா காந்தியும் கைது செய்யப்பட்டார். அவர் போராட்டம் நடத்தியபோது போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் பிரியாங்காந்தி மற்றும் காங்கிரசாரை கைது செய்தனர். இதற்கிடையே டெல்லி சாலைகளில் காங்கிரஸ் தொண்டர்கள் தர்ணா, மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் பிரதமர் இல்லத்தை நோக்கி செல்ல முயன்றனர்.

இதனால் டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதே போல் சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அப்போது போலீசார் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, இளங்கோவன் உள்பட 1000 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். புதுச்சேரியில் மத்திய அரசை கண்டித்து ஊர்வலம் நடத்திய நாராயணசாமி உள்பட 200 காங்கிரசார் கைது செய்யப்பட்டனர்.

 

-mm