தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு- நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்தல்

தமிழகத்தில் மொத்தப் பரிசோதனைகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கொரோனா நடத்தை விதிமுறைகளை உறுதி செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் பி. செந்தில் குமாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக, சராசரியாக தினசரி 2,044 பேருக்கு புதிதாகத் தொற்று பதிவாகியுள்ளது. தொற்றுப் பரவலை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் பற்றி பலமுறை அரசுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை 28ந் தேதி முடிவடைந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், கடந்த 4ந்தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நடத்தப்பட்ட மொத்தப் பரிசோதனைகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

வரவிருக்கும் மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பல்வேறு பண்டிகைகள், கொண்டாட்டங்களின் பின்னணியில் பொதுமக்கள் அதிகமாக கூடும் வாய்ப்புள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் பயணத்தை மேற்கொள்வதற்கும், குறிப்பிட்ட இடங்களில் ஒன்றுகூடுவதற்கும் இது வழிவகுக்கும்.

இது கொரோனா பெருந்தொற்று பரவுவதை எளிதாக்கும். இதனை தடுக்க நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுக்கவும் அரசு உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். கண்காணிப்பு உத்திகள், விரிவான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் பகிரப்பட்டுள்ளன.

மேலும் அவற்றை இந்த வழிகாட்டுதல்களை திறம்பட பின்பற்றுவதையும், தொடர்ந்து கண்காணிப்பதையும் உறுதி செய்யுமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. சர்வதேச பயணிகளின் பரிந்துரைக்கப்பட்ட மாதிரிகளின் மரபணு வரிசைமுறை பின்பற்றப்பட வேண்டும்.

சந்தைகள், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ரயில் நிலையங்கள் போன்ற நெரிசலான இடங்களில் கொரோனா நடத்தை விதிமுறைகளை உறுதிசெய்வதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

செப்டம்பர் 30 வரை அனைத்து அரசு தடுப்பூசி மையங்களில் , தகுதியுள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்கவும், 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியான மக்களுக்கு இலவச முன்னெச்சரிக்கை தடுப்பூசி (பூஸ்டர்) வழங்குவதை விரைவுபடுத்தவும் மாநிலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொற்றுநோய் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இதுவரை ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பாதுகாக்க நாம் புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் செயல்பட வேண்டும். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இந்த தொடர்ச்சியான மற்றும் கூட்டு முயற்சிகளில் மாநிலத்திற்கு தேவையான ஆதரவை தொடர்ந்து வழங்கும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-mm