இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் கப்பல் விரட்டி அடிப்பு

இந்திய கடலோர காவல்படை விமானம் பாகிஸ்தான் கப்பல் மீது பறந்து எச்சரித்தது. இந்திய தரப்பு கேள்விக்கு, பாகிஸ்தான் போர்க்கப்பல் கேப்டன் பதில் அளிக்கவில்லை.

பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பல் ஆலம்கிர், நேற்று குஜராத் கடல் பகுதியில் உள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லை கோடு பகுதியை கடந்து இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்தது. உடனடியாக இதை அறிந்த இந்திய கடற்படையினர், இந்திய கடலோர காவல்படையின் டோர்னியர் விமான கேப்டனுக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த இந்திய கண்காணிப்பு விமானம், பாகிஸ்தான் போர்க் கப்பலின் இருப்பிடம் குறித்து எச்சரிக்கை விடுத்ததுடன் அதன் பகுதிக்குத் திரும்பும்படி வலியுறுத்தியது. டோர்னியர், ஆலம்கிர் மீது வட்டமிட்டுக் கொண்டே இருந்ததாகவும், கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் போர் கப்பல் அத்துமீறியதன் நோக்கத்தை அறிய வானொலி மூலம் இந்திய தரப்பினர் பாகிஸ்தான் கப்பல் கேப்டனுடன் தொடர்பு கொண்ட நிலையில் அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து டோர்னியர் விமானம் மூன்று முறை பாகிஸ்தான் போர்க்கப்பலுக்கு முன்னால் பறந்து எச்சரித்தது. இதையடுத்து பின்வாங்கிய ஆலம்கீர், பாகிஸ்தான் பகுதிக்கு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

-mm