இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன உளவு கப்பல் நாளை இலங்கை வருகிறது

தென் மாநிலங்களில் உள்ள 6 முக்கிய துறைமுகங்களையும் உளவு பார்க்க முடியும். சீன உளவு கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக இலங்கைக்கு வருகிறது.

சீன ராணுவத்தின் உளவு கப்பலான ‘யுவான் வாங்-5’ இலங்கையின் ஹம்பந் தோட்டை துறைமுகத்துக்கு இம்மாதம் 11-ந்தேதி (நாளை) வர உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. அந்த கப்பல் 17-ந்தேதி வரை இலங்கை துறைமுகத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சீன கப்பல், இலங்கைக்கு வருவதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. செயற்கைகோள் கண்காணிப்பு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் வசதிகள் கொண்ட சீன உளவு கப்பலில் இருந்து 750 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு உள்ள பகுதிகளில் உளவு பார்க்கமுடியும் என்று கூறப்படுகிறது.

அதன்படி தமிழகத்தின் கல்பாக்கம்-கூடங்குளம் உள்பட அணுமின்சக்தி நிலையங்கள் மற்றும் அணு ஆய்வு மையங்களை உளவு பார்க்க முடியும்.

அதேபோல் தென் மாநிலங்களில் உள்ள 6 முக்கிய துறைமுகங்களையும் உளவு பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது. இந்தியாவின் எதிர்ப்பு காரணமாக கப்பலின் வருகையை தள்ளிவைக்கு மாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை விடுத்தது.

இது தொடர்பாக கடந்த 5-ந்தேதி சீன வெளியுறவுத்துறைக்கு இலங்கை கடிதம் அனுப்பியது. கப்பல் வருகையை ஒத்திவைக்குமாறு இலங்கை கேட்டு கொண்டதற்கு சீனா கடும் அதிருப்தியை தெரிவித்தது. இதுதொடர்பாக சீனா கூறும்போது, ‘இலங்கை அதன் சொந்த வளர்ச்சியின் நன்மைக்காக மற்ற நாடுகளுடன் உறவுகளை வளர்க்க அதற்கு உரிமை உள்ளது.

சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு என்பது பொதுவான நலன்களை பூர்த்தி செய்கிறது. பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள்காட்டி இலங்கைக்கு, இந்தியா அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது’ என்றது.

இதற்கிடையே சீன கப்பல் வருவதை தள்ளி வைக்குமாறு இலங்கை கூறியிருந்த நிலையில் அந்த கப்பல் ஹம்பந்தோட்டை துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு தைவான் கடல் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த சீன உளவு கப்பல் தற்போது இந்தோனேஷியா கடற்கரைக்கு மேற்கில் 26 கிலோ மீட்டர் வேகத்தில் இலங்கை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.

அந்த கப்பல் இந்திய நேரப்படி நாளை காலை 9.30 மணிக்கு ஹம்பந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீன உளவு கப்பல் எரிபொருள் நிரப்புவதற்காக இலங்கைக்கு வருகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் அதனை இந்தியா ஏற்கவில்லை. இதற்கிடையே சீன கப்பலின் பயணத்தை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. ஹம்பந்தோட்டை துறைமுகம் அமைக்க சீனா உதவியது. அந்த துறைமுகம் 2017-ம் ஆண்டு சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

 

-mm