கோர்பவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி நாளை முதல் அனைத்து தடுப்பூசி மையங்களில் கிடைக்கும்

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோர்பவேக்ஸ் பூஸ்டர் டோஸ் போடுவதற்கு அனுமதி 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் ஆனவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.

கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. 12 முதல் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் கடந்த மார்ச் 16-ல் தொடங்கப்பட்டது.

18 முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கான கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக கோர்பவேக்ஸ் தடுப்பூசியைப் போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ஐதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக கோர்பவேக்ஸ் என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

2-வது டோஸ் தடுப்பூசியாக கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு செலுத்தி 6 மாதங்கள் ஆனவர்கள் இந்த கோர்பவேக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக செலுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை முதல் அரசு மற்றும் தனியார் என அனைத்து தடுப்பூசி மையங்களிலும் கோர்பவேக்ஸ் தடுப்பூசி கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

-mm