ஆயுத்தப்படை காவலர்களுக்கு கலவரத்தை கட்டுப்படுத்தும் பயிற்சி- டி.ஜி.பி.சைலேந்திரபாபு உத்தரவு

கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனங்களை பராமரிக்க வேண்டும். போராட்டங்களை ஒளிப்பதிவு செய்ய காவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, அனைத்து மாவட்ட காவல்துறை சூப்பிரண்டுகள், கமிஷனர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மாவட்டம் மற்றும் மாநகர ஆயுதப்படையில் உள்ள காவலர்கள், சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் இளம் காவலர்களுக்கும் ஒவ்வொரு வாரமும் இரண்டு அல்லது மூன்று முறை கவாத்துப் பயிற்சி வழங்க வேண்டும்.

இப்பயிற்சியை ஆயுதப் படையில் உள்ள உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும், கலந்து கொள்ளவும் அவர்களை அறிவுறுத்த வேண்டும். ஆயுதப்படையில் உள்ள காவல் துணை சூப்பிரண்டுகள் மற்றும் கமிஷனர்களுக்கு கலவர சம்பவங்களில் படையை வழி நடத்துவதற்கு அவ்வப்போது உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.

ஆயுதப்படையில் கேடயம், லத்தி, ரப்பர் தோட்டாக்கள், பிளாஸ்டிக் தோட்டாக்கள், பம்ப் ஆக்சன் கன், கேஸ் கன், கேஸ் செல்கள் மற்றும் இதர ஆயுதங்கள் போதுமான அளவில் உள்ளதா? சரியாக வேலை செய்கிறதா? என அவ்வப்போது தணிக்கை செய்வதுடன், எவ்வாறு கையாள வேண்டும்? என கவாத்து பயிற்சியின்போது உரிய பயிற்சி வழங்க வேண்டும்.

கலவரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் வஜ்ரா, வருண் மற்றும் இதர வாகனங்களை முறையாக பராமரித்து தயார் நிலையில் வைப்பதற்கு அறிவுறுத்தப்பட வேண்டும். ஒலி பெருக்கிகள் மூலம் போராட்டக்காரர்களை கலைப்பதற்கும், போராட்டம் நடக்கும்போது அதனை ஒளிப்பதிவு செய்யவும் காவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

நகர மற்றும் மாவட்ட ஆயுதப்படை காவலர்களை தயார் நிலையில் வைத்து, முக்கிய நிகழ்வுகள் மற்றும் அவசரகால பணிகளுக்கு உட்படுத்த அனைத்து போலீஸ் கமிஷனர்கள் மற்றும் சூப்பிரண்டுகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

-mm