78 ஆண்டுகள் பழமை வாய்ந்த படகு- மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை

கண்காட்சி அரங்குகள், உணவகம், சிறிய கூட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் சோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 1944-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் டம்பர்டன் கப்பல் தளத்தில் உருவாக்கப்பட்ட நீராவி படகான பி.எஸ்.போபால், கொல்கத்தா துறைமுகத்தால் பயிற்சி கப்பலாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பயிற்சி நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு படகு இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பாரம்பரியமிக்க இந்த படகை புதுப்பித்து, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர கொல்கத்தா துறைமுகம் முடிவு செய்தது.

இதையடுத்து மோசமாக சிதிலம் அடைந்த நிலையில் இருக்கும் இந்த படகை புதுப்பித்து நீண்ட கால ஒப்பந்தத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக கொல்கத்தா துறைமுக தலைவர் வினித் குமார் தெரிவித்தார்.

இதற்காக வெளிப்படையான ஏல முறையில் நீண்ட கால ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஒப்பந்தத்தின் படி, பி.எஸ்.போபால் படகில் கண்காட்சி அரங்குகள், உணவகம், சிறிய கூட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.

அதன் அடிப்படை அமைப்பை மாற்றாமல், 1944-ஆம் ஆண்டு கட்டமைக்கப்பட்ட போது இருந்த உணர்வை பயணிகளுக்கு வழங்கும் வகையில் படகு நகர்வதற்கு ஏதுவாக நவீன என்ஜின்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளன. படகை‌ புதுப்பிக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணிகள் சோதனை முயற்சியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுப்பிக்கப்பட்ட பி.எஸ்.போபால் படகை அடுத்த மாத துவக்கத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்திய துணை கண்டத்தில் இது முதன் முறையாக மேற்கொள்ளப்படுகிறது என்றும் வினித் குமார் தெரிவித்துள்ளார்.

 

-mm