விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் நாளை முதல் சிறப்பு சந்தை

வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை விமரிசையாக கொண்டாட மக்கள் அனைவரும் தயாராகி வருகிறார்கள். சிறப்பு சந்தையில் கடை நடத்துபவர்கள் ஏலதாரரிடம் உரிய அனுமதி சீட்டு பெற வேண்டும்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக பூ மார்கெட் வளாகத்தில் சிறப்பு சந்தை மூலம் பூஜை பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சிறப்பு சந்தைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை விமரிசையாக கொண்டாட மக்கள் அனைவரும் தயாராகி வருகிறார்கள்.

இதையொட்டி பொதுமக்கள் ஒரே இடத்தில் பொருட்களை வாங்கி செல்ல வசதியாக கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் நாளை முதல் வருகிற 31-ந்தேதி வரை 7 நாட்களுக்கு சிறப்பு சந்தை நடத்த அங்காடி நிர்வாக குழு சார்பில் அனுமதி அளித்து உள்ளது.

இதற்கான ஏலம் விடப்பட்டுள்ளது. இதுகுறித்து அங்காடி நிர்வாக குழு முதன்மை நிர்வாக அதிகாரி சாந்தி கூறியதாவது:- சிறப்பு சந்தையில் கடை நடத்துபவர்கள் ஏலதாரரிடம் உரிய அனுமதி சீட்டு பெற வேண்டும். மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு வியாபாரிகள் விற்பனையில் ஈடுபட வேண்டும்.

ஏலதாரர் சிறப்பு சந்தைக்கு பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டண தொகையை தவிர கூடுதலாக பணம் வசூல் செய்தால் உடனடியாக உரிமம் ரத்து செய்யப்படும். அங்காடி நிர்வாக குழுவின் விதிமுறைகளை மீறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூல் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் மார்க்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் வாகனங்களில் வைத்து பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதி கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார். மார்க்கெட் வளாகத்தில் சிறப்பு சந்தைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால் உரிமம் பெற்று பராமரிப்பு கட்டணம் செலுத்தி கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து பழ மொத்த வியாபாரி ரமேஷ் கூறும்போது, “கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக விற்பனை சரிந்து தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறோம். இந்த நிலையில் முக்கிய பண்டிகை நாட்களில் வெளி வியாபாரிகளுக்கு அனுமதி கொடுத்து இருப்பது எங்களை மேலும் வேதனை அடைய செய்து உள்ளது” என்றார்.

 

-mm