மோடி அரசின் தவறான கொள்கைகளால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு- காங்கிரஸ் முன்னாள் எம்.பி. குற்றச்சாட்டு

2014-ம் ஆண்டு ரூ.410 ஆக இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, ரூ.1,053 முதல் 1,240 வரை உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை குறைந்து கொண்டிருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சி துறை தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராஜீவ் கவுடா சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஒரு காலத்தில் மக்கள் முன் பல கனவுகளை பிரதமர் மோடி முன் நிறுத்தினார். விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் இல்லாத எதிர்காலத்தை உருவாக்குவேன் என்று உறுதியளித்தார். ஆனால் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தி, இன்றைக்கு பிரதமர் மோடி மக்களை துன்பத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.

2014-ம் ஆண்டு ரூ.410 ஆக இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, ரூ.1,053 முதல் 1,240 வரை உயர்ந்துள்ளது. அதாவது 156 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு லிட்டருக்கு ரூ.71 ஆக இருந்த பெட்ரோல் விலை ரூ.95 முதல் ரூ.112 வரை அதிகரித்துள்ளது. அதாவது, 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு லிட்டர் ரூ.55 ஆக இருந்த டீசல் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை உயர்ந்திருக்கிறது. அதாவது, 75 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்ததில் இருந்து விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மோடி தவறி விட்டார். மோடி அரசின் தவறான கொள்கைகளும் வஞ்சகமும் உண்மையிலேயே மக்களின் துன்பத்தை அதிகப்படுத்தி உள்ளன.

கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களின் விலை குறைந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதற்கான பலன் நுகர்வோருக்கு கிடைக்கவிடாமல், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மோடி அரசு உயர்த்திக்கொண்டே போகிறது. மோடி அரசின் கொள்கைகள் கடுமையான சீரழிவை ஏற்படுத்தியுள்ளன.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பண மதிப்பிழப்பு மற்றும் அவசர ஜி.எஸ்.டி. என ஏற்கெனவே பொருளாதாரத்தின் அடித்தளத்தையே சிதைத்து விட்டார்கள்.

மோடி அரசின் தவறான கொள்கைகள் விலைவாசி உயர்வையும் வேலையில்லா திண்டாட்டத்தையும் அதிகப்படுத்தியுள்ளன. வருகிற செப்டம்பர் 4-ந் தேதி விலைவாசி உயர்வைப் பேசுவோம்’ என்ற பேரணி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

 

-mm