ஓராண்டுக்கு தலைமைப் பொறுப்பு… நாடு முழுவதும் 200 ஜி20 கூட்டங்களை நடத்தும் இந்தியா

ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 அன்று டெல்லியில் நடைபெற உள்ளது தலைவர் பதவியில் இருக்கும் நாடு, ஜி20 அமைப்பில் இல்லாத சில நாடுகளையும் விருந்தினர்களாக அழைப்பது வழக்கம்

உலகின் முக்கியமான வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களை கொண்ட நாடுகள் கொண்ட கூட்டமைப்பு ஜி20 என்பது என அழைக்கப்படுகிறது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்ஸிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளன.

இந்த அமைப்பின் தலைவர் பதவியை ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் பதவி வகித்து வருகின்றன. அந்த வகையில் வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதிவரை இந்தியா தலைமை பொறுப்பை ஏற்க உள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் 200 ஜி20 கூட்டங்களை இந்தியா நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசாங்கத் தலைவர்கள் மட்டத்திலான, ஜி20 தலைவர்கள் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 அன்று புதுடெல்லியில் நடைபெற உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி20 தலைவர் பதவியில் இருக்கும் நாடு, ஜி20 உறுப்பு நாடுகளுடன் ஜி20 அமைப்பில் இல்லாத சில நாடுகளையும், சில சர்வதேச அமைப்புகளையும் அதன் ஜி20 கூட்டங்களுக்கு விருந்தினர்களாக அழைக்கும் பாரம்பரியம் உள்ளது.

அதன்படி, ஜி20 தலைவர் பதவியில் இருக்கும் இந்தியா ஜி20 கூட்டங்களுக்கு, வங்கதேசம், எகிப்து, மொரீஷியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளை விருந்தினர் நாடுகளாக அழைக்கிறது. மேலும், ஐஎஸ்ஏ (சர்வதேச சோலார் அலையன்ஸ்), சிடிஆர்ஐ (பேரழிவு தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி) மற்றும் ஏடிபி (ஆசிய வளர்ச்சி வங்கி) ஆகிய அமைப்புகளையும் ஜி20 கூட்டங்களுக்கு விருந்தினர்களாக இந்தியா அழைக்கிறது.

ஜி20 தலைவர் பதவியில் இருக்கும் இந்தியா தலைமையிலான ஜி20 கூட்டங்கள் மற்றும் மாநாடுகளில் கல்வி, வர்த்தகம், திறன், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, காலநிலை நிதி, பொருளாதாரம், உலகளாவிய உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு, பசுமை ஹைட்ரஜன், பேரழிவு ஆபத்து குறைப்பு, வளர்ச்சி ஒத்துழைப்பு, பொருளாதார குற்றங்களுக்கு எதிரான போராட்டம் மற்றும் பலதரப்பு சீர்திருத்தங்கள் ஆகியவை முக்கிய பகுதிகளாக விவாதிக்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

-mm