காய்ச்சல் வேகமாக பரவுகிறது- சென்னை அரசு ஆஸ்பத்திரியில் ஒரே நாளில் 100 குழந்தைகள் அனுமதி

கடந்த சில நாட்களாக எப்போதும் இல்லாத அளவில் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் இன்று சளி, இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஏராளமானோர் குவிந்தனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக எப்போதும் இல்லாத அளவில் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

திடீர் சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் தினந்தோறும் குவிந்து வருகிறார்கள். இதனால் பல ஆஸ்பத்திரிகளில் உள்நோயாளிகள் பிரிவு நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் இன்று சளி, இருமல், காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஏராளமானோர் குவிந்தனர்.

டாக்டர்கள் பரிசோதித்த போது பல குழந்தைகளுக்கு காய்ச்சலின் தீவிரம் அதிகம் இருப்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து இன்று மட்டும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து காய்ச்சல், இருமலுக்கு சிகிச்சை பெறுபவர்கள் அதிகரித்து வருவதால் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதுகுறித்து டாக்டர்கள் கூறும்போது, “காய்ச்சல் 3 அல்லது 4 நாட்களில் குறைந்தாலும் இருமல் குறைந்தது 2 வாரங்களுக்கு நீடிக்கிறது. வழக்கத்தை விட கூடுதலாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

குழந்தைகளுக்கு பரவி உள்ள வைரஸ் எந்த வகையானது என்பது குறித்து அறிய பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அவர்களது உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். சமீப காலங்களில் காய்ச்சல், சளி மற்றும் இருமல் வேகமாக பரவுவதற்கு வானிலையில் நிலவும் மாற்றம் ஒரு காரணமாக உள்ளது.

இதனால் கடுமையான காய்ச்சல், நடுக்கம், கடும் களைப்பு, தலைவலி, உடல்வலி, தொண்டையில் வறட்சி, வாந்தி, வயிற்று வலி ஆகியவை ஏற்படுகிறது. இதில் இருந்து தப்பிக்க கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். முகக் கவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றனர்.

 

-mm