இந்தியாவுடன் பாதுகாப்பு தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறோம்- பிரான்ஸ் வெளியுறவு மந்திரி

உலக அமைதி மற்றும் ஸ்திரதன்மையையே இந்தியாவும் பிரான்சும் விரும்புகின்றன. எனது முதல் பயணமாக இந்தியாவைத் தேர்ந்தெடுக்க விரும்பினேன். பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் கொலோனா, 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவர் சந்தித்தார். அப்போது இருதரப்பு நலன், மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

இந்தியாவுடனான நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அனுப்பியிருந்த செய்தியை, பிரதமர் மோடியிடம் வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் எடுத்துரைத்தார். பாரிஸ் மற்றும் ஜெர்மனியில் அதிபர் மேக்ரோனுடன் நடந்த சந்திப்புகளை பிரதமர் மோடி அப்போது நினைவு கூர்ந்ததாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்த கேத்தரின், பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய ஜெய்சங்கர் இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறினார்.

பின்னர் பேசிய பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளதாவது: ஒரு மந்திரியாக இந்தியா வருவது இதுவே முதன்முறை, எனது முதல் பயணமாக இந்தியாவை தேர்வு செய்தேன். இந்தியாவின் பாதுகாப்பு கூட்டாளிகளில் பிரான்ஸ் முதலிடத்தில் இருக்கிறது.

பாதுகாப்புத் துறையில், வேறு எந்த நாடும் வழங்காத அளவிற்கு நவீன தொழில் நுட்பத்தை இந்தியாவுடன் பகிந்து கொள்வதை நினைத்து பிரான்ஸ் பெருமை கொள்கிறது. உலக அமைதி மற்றும் ஸ்திர தன்மையையே இந்தியாவும் பிரான்சும் விரும்புகின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

 

-mm