சிறுத்தைகள் வந்தன, வேலை வாய்ப்புகள் ஏன் வரவில்லை: பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

வேலை கேட்கும் இளைஞர்களுக்கு எப்போது வேலை கிடைக்கும். 16 கோடி வேலை வாய்ப்புகள் ஏன் உருவாக்கப் படவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் நமீபியா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட 8 சிறுத்தைகளை பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், சிறுத்தை இன்று இந்திய மண்ணுக்குத் திரும்பியுள்ளது, 8 சிறுத்தைகள் வந்து விட்டன. சுதந்திரத்தின் 75 -ஆவது ஆண்டுப் பெருவிழா நமது பாரம்பரியத்தை மீட்பதற்கு மட்டுமல்ல, இப்போது சிறுத்தைகள் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்திருப்பதற்கும்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் பேச்சு குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பதிவில், எட்டு சிறுத்தைகள் வந்து விட்டன, 8 ஆண்டுகளில் 16 கோடி வேலை வாய்ப்புகள் ஏன் உருவாக்கப் படவில்லை என்பதை அவர் (பிரதமர் மோடி) சொல்ல வேண்டும், வேலை கேட்கும் இளைஞர்களுக்கு எப்போது வேலை கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடியின் பிறந்தநாளை தேசிய வேலையின்மை தினமாக அறிவித்த காங்கிரஸ் கட்சி, வாக்குறுதி அளித்தபடி இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தது. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வழங்குவதாக மோடி, வாக்குறுதி அளித்திருந்த நிலையில், கடந்த 8 ஆண்டுகளில் ஏழு லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், 22 கோடி பேர் வேலைக்காக விண்ணப்பித்துள்ளதாகவும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

 

-mm