பிரிட்டனின் எலிசபெத் அரசியார் காலமானதை அடுத்து உலக மக்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர். இவ்வேளையில், அவரது மகுடத்தில் இருக்கும் கொஹினூர் வைரம் குறித்த சர்ச்சை இணையத்தில் பரவலாகி வருகிறது.
பிரிட்டன் அந்த வைரத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று இந்தியர்கள் பலர் இணையம் வழி குரல் எழுப்பியுள்ளனர். அரசியின் மகுடத்தில் இருக்கும் 105 காரட் எடை கொண்ட வைரம் அவரது முடிசூட்டு விழாவின்போது அவருக்கு அணிவிக்கப்பட்டது.
அந்த வைரம் 1849ஆம் ஆண்டு முதல் பிரிட்டனில் உள்ளது. பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியின்போது அது கொண்டுசெல்லப்பட்டது என்று இந்தியர்கள் சொல்கின்றனர்.
அரசியார் காலமான பிறகாவது அதைத் திரும்பக் கொடுக்கவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். Twitter தளத்தில் #kohinoor எனும் பதிவு ஒரு வாரமாக அதிகளவில் தென்படுகிறது.
கொஹினூர் வைரம் குறித்த சர்ச்சை பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்ட நாள்களாக நீடிக்கிறது.இந்தியாவின் குற்றச்சாட்டுகளை பிரிட்டன் மறுக்கிறது.
அதைத் திரும்பப் பெற சட்டபூர்வ அதிகாரம் ஏதும் இந்தியாவுக்கு இல்லை என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், மன்னராகப் பொறுப்பேற்றிருக்கும் சார்ல்ஸ் அதைத் திரும்பக் கொடுக்க முயற்சி செய்வார் என்று பலரும் இணையத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-smc