இந்தியா உட்பட அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது- ஷபாஸ் ஷெரீப்

அமைதியான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். தெற்காசியாவில் அமைதிக்கான உறுதிப்பாட்டில் நாங்கள் நிலையாக இருக்கிறோம்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது.

இரு நாடுகளிலும் ஆயுதங்கள் இருந்தாலும், போர் ஒரு விருப்பமல்ல. அமைதியான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். 1947 முதல் மூன்று போர்களை சந்தித்துள்ளோம். இதன் விளைவாக, இரு தரப்பிலும் துன்பம், வறுமை மற்றும் வேலையின்மை மட்டுமே அதிகரித்துள்ளது.

தெற்காசியாவில் அமைதிக்கான எங்கள் உறுதிப்பாட்டில் நாங்கள் நிலையாக இருக்கிறோம் என்று உலக மன்றத்திற்கு நான் உறுதியளிக்கிறேன். ஆக்கப்பூர்வமான சூழலை உருவாக்க இந்தியா நியாயமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜம்மு காஷ்மீரில் தனது ராணுவ நிலைகளை இந்தியா அதிகரித்துள்ளது.

இதனால் அது உலகிலேயே மிகவும் ராணுவ மயமாக்கப்பட்ட மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முன்னதாக ஜம்மு காஷ்மீர் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா பலமுறை கூறியுள்ளது. பயங்கரவாதம், மற்றும் வன்முறை இல்லாத சூழலில் பாகிஸ்தானுடன் இயல்பான உறவை விரும்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

-mm