ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை?- தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய ஆலோசனை

தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் நடைபெற இருக்கிறது. புதிய சட்ட மசோதாக்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்ததாக தெரிகிறது.

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அனைத்து துறையை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சட்டசபை கூட்டம் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி சில முக்கிய முடிவுகள் எடுப்பது சம்பந்தமாக இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து முடித்து விசாரணை அறிக்கையை ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்து இருந்தது.

இந்த அறிக்கையை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்வது குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையையும் ஏற்கனவே அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த அறிக்கையையும் சட்டசபையில் தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுதவிர ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்திற்கு மசோதா கொண்டுவருவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் தமிழகத்தில் புதிதாக தொழில்கள் தொடங்குவதற்கு அனுமதி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கொள்கை முடிவுகள் சம்பந்தமாகவும் இந்த அவசர கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதுதவிர தமிழகத்தின் நலன், பல முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழக சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் 2-வது வாரம் அல்லது 3-வது வாரத்தில் நடைபெற இருக்கிறது.

எனவே சட்டசபை கூட்டத்தில் என்னென்ன சட்ட மசோதாக்களை கொண்டுவந்து நிறைவேற்றலாம் என்பது குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்ததாக தெரிகிறது. இதனால் அடுத்த மாதம் தொடங்க உள்ள சட்டசபை கூட்டம் மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் எதுவும் உடனடியாக அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை.

 

-mm