ஆர்.எஸ்.எஸ். அமைப்பு காந்தி ஜெயந்தி நாளில் ஊர்வலம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பு

காந்தி ஜெயந்தி நாளில் தமிழ்நாட்டில் 50 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அந்த நாளில் தமிழ்நாட்டில் எந்த ஊர்வலம், பொதுக்கூட்டத்துக்கும் அனுமதி தரப்படாது என்று கூறியுள்ளது தமிழ்நாடு அரசு.

உயர்நீதிமன்றம் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்ட நிலையில் சட்டம் ஒழுங்கு நிலைமையில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளின் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினை இந்திய ஒன்றிய அரசு தடை செய்துள்ள நிலையில் அதற்கு எதிராக சில இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன.

இந்தப் பின்னணியில் மாநிலத்தில் பல இந்து அமைப்புகளின் தலைவர்கள், வீடுகள் வண்டிகள் மீது பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டுகள் வீசும் நிகழ்வுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த காலத்தில் சில பாஜக நிர்வாகிகள் தங்கள் மீது தாங்களே தாக்குதல் நடத்திக்கொண்டு நாடகமாடிய நிகழ்வுகளின் பின்னணியில் இந்த நிகழ்வுகளை சில அரசியல் கட்சிகள் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்றன.

இப்படி மதப் பதற்றத்தை நோக்கி இட்டுச்செல்லும் வாய்ப்புள்ள நிகழ்வுகள் நடந்துள்ள பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டிருந்ததால், அதே நாளில் சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் ஊர்வலம், மனித சங்கிலி போன்றவற்றை நடத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் அனுமதி கேட்டுள்ளன.

போட்டியான இத்தகைய மக்கள் திரள் நடவடிக்கைகள் மோதலாக மாறி சட்டம் ஒழுங்கை பாதிக்குமோ என்ற அச்சத்தை பலரும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுவந்தனர். இந்தப் பின்னணியில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்க காவல் துறையினர் முழு வீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 

 

-BBC