முதலில் ஆடிய இந்தியா 237 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 221 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி அசாமின் கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை குவித்தது. சிறப்பாக தொடக்கம் கொடுத்த கே.எல்.ராகுல் 28 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோகித் சர்மா 43 ரன் அடித்தார்.
அதிரடியில் மிரட்டிய சூரியகுமார் யாதவ் 22 பந்துகளில் 5சிக்சர், 5 பவுண்டரி உள்பட 61 ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி 49 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தினேஷ் கார்த்திக் ஆட்டமிழக்காமல் 17 ரன் அடித்தார்.
இதையடுத்து, 238 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடியது. கேப்டன் பவுமா, ரூசோவ் டக் அவுட்டாகினர். மார்கிராம் 33 ரன்னில் அவுட்டானார். டி காக், டேவிட் மில்லர் பொறுமையுடன் ஆடினர். டி காக் அரை சதமடித்தார். டி காக் 69 ரன் எடுத்தார். டேவிட் மில்லர் சதமடித்து அசத்தினார். அவர் 106 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி 20 தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது.
-mm