தசரா பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சோதனை அடிப்படையில் 5ஜி சேவை- ஜியோ நிறுவனம் அறிவிப்பு

முதல் கட்டமாக டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் 5ஜி சேவை. மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக அமல்படுத்தப்படும்.

டெல்லியில் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் 5ஜி சேவையை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். முன்னதாக தீபாவளி முதல் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் ஜியே 5ஜி சேவை வழங்கப்படும் என்றும் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தசரா பண்டிகையான நாளை முதல் 4 நகரங்களில் சோதனை அடிப்படையில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என, ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் நாளை முதல் 5ஜி சேவை சோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த 4 நகரங்களில் ஜியோ வாடிக்கையாளர்கள் ஒரு ஜி.பி.பி.எஸ்க்கும் கூடுதலான வேகத்தில் எல்லையில்லா 5ஜி டேட்டாவைப் பெறுவார்கள் என்று ஜியோ நிறுவன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த சேவைகளைப் பெற புதிய சிம் தேவையில்லை எனவும் ஏற்கனவே உள்ள செல்போன்களில் ஜியோ 5ஜியை வழங்கும் வகையில் பணியாற்றி வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற நகரங்களுக்கான 5ஜி சேவை படிப்படியாக சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.

இந்த சேவை குறித்து ஜியோ வாடிக்கையாளர்கள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் மேலும் சேவை வலுப்படுத்தப்படும் என்றும், 425 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன், இந்தியாவின் மாற்றத்தை ஜியோ 5ஜி சேவை விரைவுபடுத்தும் என்றும் அந்நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

-mm