இந்தியாவில் 94 சதவீதம் பேர் கைகளில் தவழும் செல்போன்: தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையில் தகவல்

வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் சைக்கிள் பயன்பாடு குறையவில்லை. நகர்ப்பகுதியில் 95.3 சதவீதம் பேரும், கிராமப்பகுதியில் 95.9 சதவீதம் பேரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். சென்னை : மாற்றம் ஒன்றே மாறாதது. ஆதியில் தொடங்கிய மனிதனின் நடைபயணம் இன்று பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு செவ்வாய் கிரகத்துக்கும், அதற்கு அப்பாலும் நீண்டு போய்க்கொண்டு இருக்கிறது.

காற்று, மழை, காலநிலை, தட்பவெப்பம் என இயற்கையிலும் கூட அவ்வப்போது மாற்றம் என்பது நிகழ்ந்து வருகிறது. உலகத்தையே உள்ளங்கையில் கொண்டு வரும் கம்ப்யூட்டர், செல்போனின் பயன்பாடு போன்ற எவ்வளவோ மாற்றங்கள் மனித வாழ்வில் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இத்தகைய மாற்றங்கள் காரணமாக அம்மிக்கல், ஆட்டுக்கல், ரேடியோ, டிரான்சிஸ்டர், டெலிபோன் போன்று தேடி கண்டுபிடிக்க வேண்டிய பொருட்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இருந்தபோதிலும் இத்தகைய பொருட்களில் சைக்கிள் மட்டும் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்தியாவில் பெரும்பாலானோரின் வீடுகளில் சைக்கிள் பயன்பாடு இருந்து வருவதையும், பலர் குறுகிய தூர பயணத்துக்கும், சிலர் வெகுதூர பயணத்துக்கும் பயன்படுத்தி வருவதையும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:- தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி மோட்டார் சைக்கிள், மொபட் போன்றவற்றின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நகர்ப்புறங்களில் 43 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் 54 சதவீதம் பேரும் சைக்கிளை தங்களது பயணத்துக்காக பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிள், மொபட்டை நகர்ப்புறங்களில் 54.2 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் 44.3 சதவீதம் பேரும் பயன்படுத்துகின்றனர். அதேவேளையில் கார் பயன்பாடு நகர்ப்பகுதியில் 13.8 சதவீதமும், கிராமப்பகுதியில் 4.4 சதவீதமும் உள்ளது.

மிக துல்லியமாக தெரியும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கலர் டி.வி.கள் பலரது வீடுகளை அலங்கரித்து வருகின்றன. அதாவது, நகர்ப்பகுதியில் 86.8 சதவீத வீடுகளிலும், கிராமப்பகுதியில் 58.4 சதவீத வீடுகளிலும் கலர் டி.வி.கள் உள்ளன. அதேவேளையில் 2.3 சதவீதம் பேர் தற்போது வரை கறுப்பு-வெள்ளை டி.வி.களையே பயன்படுத்தி வருகின்றனர். ரேடியோ, டிரான்சிஸ்டர் என்றால் என்ன? என வருங்கால சந்ததியினர் கேள்வி எழுப்பும் வகையில் அதன் பயன்பாடும் வெகுவாக குறைந்துவிட்டது.

நகர்ப்பகுதியில் 6.7 சதவீதத்தினரும், கிராமப்பகுதியில் 4.1 சதவீதத்தினரும் ரேடியோ, டிரான்சிஸ்டர் பயன்படுத்தி வருகின்றனர். செல்போன் பயன்பாடு மட்டும் நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற பாகுபாடு இல்லாமல் நகர் மற்றும் கிராமப்பகுதிகளை வெகுவாக ஆக்கிரமித்துள்ளது.

அதாவது நகர்ப்பகுதியில் 96.7 சதவீதம் பேரும், கிராமப்பகுதியில் 91.5 சதவீதம் பேரும் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். ஒட்டுமொத்தமாக 94.1 சதவீதத்தினர் செல்போன் பயன்படுத்துகின்றனர். இணையதள வசதி இல்லாத செல்போன், எதற்கும் உதவாது என்ற மனப்பாங்கு மக்கள் மனதில் வேரூன்றி இருப்பதால் இணையதள பயன்பாடும் அதிகரித்து உள்ளது.

அதாவது நகர்ப்புறத்தில் 64.6 சதவீதத்தினரும், கிராமப்புறத்தில் 41 சதவீதத்தினரும் இணையதள வசதியை பயன்படுத்தி வருகின்றனர். லேன்ட்லைன் எனப்படும் டெலிபோன் பயன்பாடும் வெகுவாக குறைந்துவிட்டது. டெலிபோன் பயன்பாடு நகர்ப்பகுதியில் 4.6 சதவீதமாகவும், கிராமப்பகுதியில் 1.1 சதவீதமாகவும் உள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவன பணியில் இருப்பவர்கள், தொழில் செய்பவர்கள் என குறிப்பிட்ட பிரிவினரிடம் மட்டுமே வங்கி கணக்கு இருந்து வந்த நிலையில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன், தெருவோர சிறு வியாபாரிகளுக்கு கடன் என்பது போன்ற அரசின் திட்டங்களும், சிறுசேமிப்பு குறித்த விழிப்புணர்வும் பெரும்பாலானவர்களை வங்கி கணக்கு தொடங்க செய்தது.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி நகர்ப்பகுதியில் 95.3 சதவீதம் பேரும், கிராமப்பகுதியில் 95.9 சதவீதம் பேரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். வறுமை என்பது குறிப்பிட்ட சதவீதம் இந்தியாவில் இருந்து வருகின்ற போதிலும் இது செல்போன் வாங்குவதிலும், பயன்படுத்துவதிலும் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

 

-mm