தமிழகம் முழுவதும் மத்திய அரசு திட்டங்கள் நேரில் ஆய்வு- மாவட்ட வாரியாக செல்ல மந்திரிகளுக்கு மோடி உத்தரவு

ஆய்வுகளின் போது சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம் திட்டங்களின் செயலாக்கம் பற்றி கேட்டறிவார்கள். திட்டங்களின் பயனாளிகளுடனும் கலந்துரையாடுவார்கள்.

மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழை பெண்களுக்கு இலவச எரிவாயு, அனைவருக்கும் வங்கி கணக்கு, செல்வமகள் சேமிப்பு திட்டம், சிறு வியாபாரிகளுக்கு கடன், விவசாயிகளுக்கு உதவித் தொகை, பயிர் காப்பீடு, உணவு பாதுகாப்பு திட்டம், தோட்ட பயிர்களுக்கான காப்பீடு, அன்னயோஜனா, ஊரக குடிநீர் வழங்கல், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம், அடல் பென்ஷன், மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தகுதியுடைய அனைவருக்கும் சென்றடைந்துள்ளதா என்பதை அறிய மோடி திட்டமிட்டுள்ளார்.

பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் திட்டங்களின் செயலாக்கம் எளிதில் பார்வைக்கு செல்வதால் மற்ற மாநிலங்களில் நேரடியாக ஆய்வு செய்ய மோடி உத்தரவிட்டுள்ளார்.

இதன் படி தமிழகத்துக்கு மாவட்ட வாரியாக மத்திய மந்திரிகள் செல்கிறார்கள். இன்று கோவையில் எல்.முருகன், அஜய் மிஸ்ரா, பூபேந்திர யாதவ் ஆகியோர் ஆயவு செய்கிறார்கள். நாளை மத்திய மந்திரி அன்னபூர்ணா நாமக்கல்லில் ஆய்வு மேற்கொள்கிறார்.

இந்த ஆய்வுகளின் போது சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களிடம் திட்டங்களின் செயலாக்கம் பற்றி கேட்டறிவார்கள். திட்டங்களின் பயனாளிகளுடனும் கலந்துரையாடுவார்கள். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் விவாதிப்பார்கள்.

முழுமையாக ஆய்வு செய்து ஒவ்வொரு மாவட்டத்தின் கள நிலவரத்தையும் பிரதமர் மோடியிடம் மத்திய மந்திரிகள் அறிக்கையாக சமர்பிக்க வேண்டும். இந்த மாத இறுதிக்குள் இந்த பணிகளை முடிக்கும்படி மத்திய மந்திரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

-mm