இந்தியாவில் காணப்படும் பட்டினி அளவு மிக தீவிரமானது என்று கூறப்பட்டுள்ளது பாஜக அரசை முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
உலக அளவில் பட்டினி மற்றும் ஊட்டசத்து குறைபாடு ஆகியவற்றை ஆய்வு செய்து பட்டினிக் குறியீடு பட்டியல் வெளியிடப்படுகிறது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியல் நேற்று வெளியானது. 121 நாடுகள் அடங்கிய இப்பட்டியலில் இந்தியா 107-வது இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டில் 101-வது இடத்தில் இந்தியா இருந்தது.
அண்டை நாடுகளான வங்காளதேசம், பாகிஸ்தான், நேபாளத்தை விட இந்தியா இந்தப் பட்டியலில் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் இந்தப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன. இந்த நாடுகளின் பட்டினிக் குறியீடு 5-க்கும் குறைவாகவே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக பட்டினிக் குறியீடு குறித்து வெளியான அறிக்கையை சுட்டிக்காட்டி மத்தியில் ஆளும் பாஜக அரசை முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் விமர்சித்துள்ளார். ப.சிதம்பரம் தனது டுவிட்டரில் இது பற்றி கூறுகையில், ‘கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் இந்தியா தொடர்ந்து பின் தங்கியே வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி, வளர்ச்சி குன்றிய நிலை உள்ளிட்ட உண்மையான பிரச்சினைகளுக்கு பிரதமர் மோடி எப்போது தீர்வு காணப்போகிறார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்வதேச அளவிலான பட்டினி குறியீட்டு அறிக்கையை தயாரித்த இரு அமைப்புகளும் இந்தியாவில் காணப்படும் பட்டினி அளவு தீவிரமானது என்று வரையறுத்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு, 5வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயர்த்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகிய காரணிகளை அடிப்படையாக வைத்து உலக பட்டினி குறியீடு கணக்கிடப்படுகிறது.
ஆனால், உலகளாவிய பசி குறியீட்டைக் கணக்கிடப் பயன்படுத்தப்படும் முறை அறிவியல்பூர்வமற்றது என்று இந்தியா கூறியது குறிப்பிடத்தக்கது.
-mm