வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு- மஞ்சள் எச்சரிக்கை

மழை வெள்ளம் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலையில் செல்லும் கார்கள், பைக்குகளும் மழை நீரில் தத்தளித்தன. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் மழையின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இங்கு தினமும் கனமழை பெய்து வருகிறது.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு, பெங்களூருவுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 60 முதல் 120 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அடைமழை பெய்து வருகிறது. ராஜாஜிநகர், மெஜஸ்டிக், சேஷாத்திரிபுரம் கே.ஆர்.மார்க்கெட், ஜே.பி.நகர், சாந்திநகர், எம்.ஜி.ரோடு, இந்திராநகர், காட்டன்பேட்டை, விஜயநகர், பசவேஸ்வரா நகர், மைசூரு ரோடு, அக்ரஹாரா தாசரஹள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் போக்குவரத்து சிக்னல்களில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

நேற்று மாலை பெய்த மழை, நள்ளிரவு வரை வெளுத்து கட்டியது. மழை வெள்ளம் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலையில் செல்லும் கார்கள், பைக்குகளும் மழைநீரில் தத்தளித்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது, சாலைகள் சேதம் அடைந்தன.

கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெங்களூரு நகரின் மத்திய, கிழக்கு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது. நகரின் கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் வடக்குப் பகுதியில் உள்ள ராஜமஹால் குட்டஹள்ளியில் 59 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாலை 7.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியதால், அலுவலகம் செல்பவர்கள், மெட்ரோ ரெயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்தனர். விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன, மீட்புப் பணிகள், வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள் மற்றும் வீடுகள், நீரில் மூழ்கிய விலையுயர்ந்த கார்கள் போன்ற மழை வெள்ள காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

இந்த ஆண்டு, பெங்களூருவில் 1,706 மிமீ மழை பெய்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் 1,696 மிமீ மழை பதிவானதே அதிகபட்ச அளவாக இருந்து. சாமராஜநகர், சிக்கமகளூரு, ஹாசன், குடகு, பெங்களூரு ரூரல், சித்ரதுர்கா, ஹாசன், ஷிவமொக்கா, துமகுரு மற்றும் மண்டியா மாவட்டங்களிலும் கன மழை பெய்தது. தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, சாமராஜநகர், குடகு, ஷிவமொக்கா, பெலகாவி, ஹாவேரி, பாகல்கோட், கலபுர்கி, கொப்பல் மற்றும் பல்லாரி ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

ஏற்கனவே கடந்த மாதம் வரலாறு காணாத மழை வெளுத்து வாங்கியது. அப்போது சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. ஐடி நிறுவன ஊழியர்கள், வெள்ளத்திற்கு நடுவில் டிராக்டர் மூலம் அலுவலகம் சென்றனர்.

சில பகுதிகளில் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்த பெரும் பணக்காரர்களையும் மழை தவிக்கவிட்டது. பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அலுவலகம் செல்பவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலை உருவானது. அந்த பாதிப்பில் இருந்து பொதுமக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

-mm