இந்தியர்கள் காணாமல் போனது குறித்த விசாரணையை விரைவுபடுத்த கோரிக்கை . கடத்தப்பட்ட இந்தியர்களின் இருப்பிடத்தைக் கண்டறிய இந்திய தூதரகம் முயற்சி.
கென்யா நாட்டில் வசிக்கும் இந்தியர்களான முகமது சமி கித்வாய் மற்றும் சுல்பிகார் அகமது கான் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் மொம்பாசா பகுதியில் கார் ஒன்றில் சென்ற நிலையில் காணாமல் போனதாக புகார் எழுந்தது.
அந்த கார் டிரைவர் நிகோடெமஸ் முவானியாவையும் காணவில்லை என கூறப்படுகிறது. இந்தியர்கள் இருவரும் கடத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியான நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, காணாமல் போன இரண்டு இந்தியர்களின் இருப்பிடத்தைக் கண்டறிய இந்திய தூதரகம் கென்ய அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக தெரிவித்தார்.
தலைநகர் நைரோபியில் உள்ள இந்திய தூதர் நம்க்யா கம்பா, கென்ய அதிபர் வில்லியம் சமோய் ருடோவை சந்தித்து காணாமல் போன இந்தியர்கள் குறித்த ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார்.
கடத்தலை அடுத்து நிலவும் சூழ்நிலைகள் மற்றும் அதைத் தொடர்ந்து தகவல் எதுவும் இல்லாமை மிகவும் கவலையளிக்கிறது என்றும், இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்படும் என்று இந்தியா எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடத்தப்பட்ட இந்தியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்திய தூதரகம் உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-mm