டி20 உலகக் கோப்பை: இந்தியா-நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்

இந்திய அணி எளிதாக வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு. முடிந்தவரை சிறப்பாக விளையாடுவோம் என நெதர்லாந்து கேப்டன் நம்பிக்கை.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை போட்டி தொடரில் தற்போது சூப்பர்12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று ஒரேநாளில் மூன்று போட்டிகள் நடைபெறுகின்றன.

காலை 8.30 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் வங்காளதேசம், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. நண்பகல் 12.30 மணிக்கு தொடங்கும் 2வது போட்டி இந்தியா நெதர்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பேட்டிங் மற்றும் பௌலிங்கில் வலுவாக இருக்கும் இந்திய அணி, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியிலும் எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெதர்லாந்து தனது முதல் போட்டியில் வங்காளதேசத்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ், இன்றைய போட்டியில் நாங்கள் வெற்றி பெற மாட்டோம் என்று பெரும்பாலானவர்கள் கருதுவதாகவும், முடிந்தவரை சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எங்களது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாலை 4.30 மணிக்கு பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 3வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.

 

-mm