டி20 கிரிக்கெட் – ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்து சூர்யகுமார் யாதவ் சாதனை

டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது. நடப்பு ஆண்டில் டி20 போட்டிகளில் 1,026 ரன்களை எடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவு பெற்றன. நேற்று நடந்த சூப்பர் லீக் சுற்று கடைசி ஆட்டத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 51 ரன் குவித்து பெவிலியன் திரும்பினார். அதிரடியில் மிரட்டிய சூரியகுமார் யாதவ் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 61 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

இதையடுத்து 187 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே 115 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தப் போட்டியில் 61 ரன்கள் குவித்ததன் மூலம் நடப்பு ஆண்டில் நடைபெற்ற டி 20 போட்டிகளில் 1,026 ரன்களை எடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

இதன்மூலம், டி 20 போட்டிகளில் ஒரே வருடத்தில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். நடப்பு ஆண்டில் 28 போட்டிகளில் மொத்தம் 1026 ரன்களை எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் முதலிடத்தில் உள்ளார். அவர் கடந்த ஆண்டு 29 போட்டிகளில் 1326 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

-mm