குழந்தைகளின் கற்றல் இடைவெளியைக் குறைக்க உறுதியான அணுகுமுறை தேவை. இந்தியாவுடன் அறிவுசார் துறையில் ஒத்துழைக்க பின்லாந்து ஆர்வம். இந்தியா வந்துள்ள பின்லாந்து நாட்டின் கல்வி மந்திரி பெட்ரி ஹொன்கோனென், நேற்று முன்தினம் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங்கை டெல்லியில் சந்தித்தார்.
அதன் தொடர்ச்சியாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானுடன் நேற்று அவர் பேச்சுவார்த்தை நடத்தினார் கொரோனாவுக்கு பிந்தைய கல்வித் துறைக்கான சவால்கள், முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். குழந்தைகளின் கற்றல் இடைவெளியைக் குறைக்க உறுதியான அணுகுமுறை தேவை என்று அவர்கள் ஒப்புக் கொண்டனர். இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்தும் அப்போது ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய தர்மேந்திரப் பிரதான், இந்தியாவுடன் அறிவுசார் துறையில் ஒத்துழைக்க பின்லாந்து ஆர்வம் காட்டுவதாக கூறினார். ஆரம்ப கால குழந்தைகள் பராமரிப்பு, ஆசிரியர் பயிற்சி, டிஜிட்டல் கல்வி போன்றவற்றில் ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டு பயனடையலாம் என்று அவர் தெரிவித்தார்.
பின்லாந்து பல்கலைக்கழகங்கள் இந்திய உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட அவர் அழைப்பு விடுத்தார். வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு இந்தியாவில் அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு விரைவில் கொள்கை ரீதியான முடிவை அறிவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-mm