வளர்ச்சிக்கான திட்டம் இல்லாத காங்கிரசுக்காக வாக்குகளை ஏன் வீணாக்குகிறீர்கள்?- பிரதமர் மோடி

எந்த காங்கிரஸ் தலைவரிடமாவது வளர்ச்சிக்கான பாதை என்ன என்று கேளுங்கள். அவர்கள் செய்த ஒரு பணியாவது உங்களுக்கு நினைவிருக்கிறதா?

அம்ரேலி குஜராத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அம்ரேலி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: குஜராத்தை வலுப்படுத்த பாஜக அரசு பல பணிகளை செய்துள்ளது. இப்போது ​​மாபெரும் செயல்களை செய்வதற்கான நேரம் வந்து விட்டது.

அதைச் செய்யும் திறன் காங்கிரசுக்கு இல்லை. எதிர்க்கட்சியால் உங்களுக்கு ஒருபோதும் நல்லது செய்ய முடியாது. பிரதம மந்திரி விவசாய நிதி உதவி திட்டத்தின் கீழ், குஜராத்தில் 60 லட்சம் விவசாயிகளுக்கு மொத்தமாக 12,000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. காங்கிரஸிடம் இருந்து இது போன்ற விஷயங்களை எதிர்பார்க்க முடியாது.
ஒரு காங்கிரஸ் தலைவராவது உங்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்க்க முடியாது. எந்த காங்கிரஸ் தலைவரிடமாவது வளர்ச்சிக்கான பாதை என்ன என்று கேளுங்கள், அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை.

அம்ரேலி தொகுதி மக்கள் முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்தனர். இப்போது சொல்லுங்கள் அவர்கள் உங்களுக்காக (இந்த ஐந்து ஆண்டுகளில்) என்ன செய்தார்கள்?

அவர்கள் செய்த ஒரு பணியாவது உங்களுக்கு நினைவிருக்கிறதா? பிறகு ஏன் அவர்களுக்கு உங்கள் வாக்குகளை வீணாக்குகிறீர்கள்? அம்ரேலியை வலுப்படுத்த, இந்த முறை தாமரையை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கடந்த 2017 ஆண்டு நடைபெற்ற குஜராத் தேர்தலில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள தாரி, அம்ரேலி, லத்தி, சவர்குண்ட்லா மற்றும் ரஜூலா ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

-mm