ஜாம்பவான் ஸ்டீவ் ஜாப்ஸி-க்கு உருவச்சிலை திறந்து வைப்பு!

தொழில்நுட்ப உலகில் தனி முத்திரை படைத்து ஜாம்பவானாகத் திகழ்ந்தவரும் ஆப்பிள் நிறுவனத்தின் நிருவனர், ஸ்டீவ் ஜாப்ஸ் புற்று நோயுடன் கடந்த பல மாதங்களாகப் போராடி வந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 5-ம் தேதி உயிரிழந்தார். தொழில்நுட்ப உலகிற்கு இது மிகப் பெரிய இழப்பாகக் கருதப்படுகின்றது.

இந்நிலையில் அவரை கௌரவிக்கும் முகமாக ஸ்டீவ் ஜாப்ஸின் உருவச் சிலையொன்று ஹங்கேரி தலைநகரான புடாபஸ்ட் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புடாபஸ்ட்டிலுள்ள சயன்ஸ் பார்க் ஒன்றிலேயே இவ் உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸுக்காக முதன் முதலாகத் திறந்து வைக்கப்பட்ட சிலை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

‘கிராபி சொப்ட்’ என்ற நிறுவனமே இச்சிலையைத் திறந்துவைத்துள்ளது. குறித்த நிறுவனத்திற்கு ஆரம்பகாலத்தில் ஸ்டீவ் பல உதவிகளைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வெண்கலத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இச்சிலை 6.5 அடி உயரம்கொண்டதுடன் ஹங்கேரிய நாட்டு சிற்பி ஹேர்னோ டாத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸை கௌரவப் படுத்தும் வகையில் இதுவரை சிலை எதுவும் திறந்து வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.