கொரோனா தடுப்பூசியை தயாரித்து வழங்கும் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவன தலைவராக இருந்து வருபவர் ஆதார் புனாவாலா. இவரது நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக இருந்து வருபவர் சதீஷ் தேஷ்பாண்டே.
அண்மையில் இவருக்கு வாட்ஸ் அப் மூலம் ஆதார் புனாவாலா புகைப்படம் இட்ட குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், நான் மீட்டிங்கில் பிசியாக இருப்பதாகவும், என்னை அழைக்க வேண்டாம். நான் அனுப்பிய 8 வங்கி கணக்கிற்கு உடனடியாக பணத்தை அனுப்பி விடவும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை நம்பிய சதீஷ் தேஷ்பாண்டே சிறிதும் தாமதிக்காமல் அதில் குறிப்பிடப்பட்டு இருந்த வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 10 லட்சத்து 10 ஆயிரத்து 554-ஐ அனுப்பி விட்டார்.
மறுநாளில் தேஷ்பாண்டே நிறுவன தலைவர் ஆதார் புனாவாலாவிடம் செல்போனில் உரையாடியபோது பணம் அனுப்பிய தகவலை தெரிவித்தார். இதனை கேட்ட அவர் தான் எந்தவொரு குறுந்தகவலும் அனுப்பவில்லை என மறுப்பு தெரிவித்தார். இதன்பிறகு தான் அவர்கள் மோசடி போன விவகாரம் தெரியவந்தது.
ஆதார் புனாவாலாவின் செல்போன் நம்பரை மர்மகும்பல் ‘ஹேக்’ செய்து குறுந்தகவல் அனுப்பி பணமோசடி செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக பந்த்கார்டன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் படி போலீசார் பணம் அனுப்பப்பட்ட வங்கி கணக்கு விவரங்களை சரிபார்த்தனர்.
இதில், மோசடி ஆசாமிகள் தங்கள் பெயரை எங்கும் குறிப்பிடாமல் பணம் பரிமாற்றம் செய்து உள்ளனர். இதைத்தவிர பீகார், அசாம், ஒடிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் எனவும், பணம் டெபாசிட் ஆன பின்னர் மற்றவர்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இதனால் தொடர்புடைய அனைத்து வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது.
வங்கி கணக்கு வைத்திருந்த செல்போன் நம்பரை கொண்டு விசாரித்ததில் 7 பேரின் அடையாளம் தெரியவந்தது. இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜூவ்குமார் பிரசாத், சந்திரபூஷன் ஆனந்த் சிங், கன்னையா குமார், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த ரவீந்திரா குமார், மத்திய பிரதேச மாநிலம் ரபி கவுசல் குப்தா, யாசிர் நசீம் கான், ஆந்திராவை சேர்ந்த பிரசாத் சத்தியநாராயணா ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
இதில் பிரசாத் சத்தியநாராயணா என்பவர் சாப்ட்வேர் என்ஜினீயராகவும், ரபி கவுசல் குப்தா வணிக வங்கி ஊழியராகவும் இருந்து வந்தனர். இவர்களின் உதவியுடன் பணமோசடி நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-mm