சட்டசபைத் தேர்தல் நடைபெறும் குஜராத் மாநிலத்தில் இதுவரை ரூ.750 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் மற்றும் போதைப்பொருள்களை பறிமுதல் செய்துள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: பணம் கடத்தப்படுவதாக பல இடங்களில் இருந்து புகார்கள் வந்துள்ளன. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது மோசமான நடைமுறையாகும், நாங்கள் அதை முற்றிலும் தடுக்கும் முயற்சியை செய்கிறோம்.
குஜராத்தின் அண்டை மாநில எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. வருவாய் புலனாய்வு இயக்குநரகம், வருமானவரித்துறை, தீவிரவாத தடுப்புப்படை மற்றும் மாநில காவல்துறை இணைந்து இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டன.
குஜராத்தில் கடந்த 2017 தேர்தலின் போது ரூ.27 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் இந்த தேர்தலில் இதுவரை 750 கோடி ரூபாய் அளவிற்கு ரொக்க பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குஜராத்தில் மதுவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 15 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
60 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப் பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கையால் இந்த முறை கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு அதிகரித்துள்ளது. வதோதராவில் பெரிய அளவில் ஜப்தி நடக்கிறது. ரூ.450 கோடி வரை பறிமுதல் செய்யப்படும்.
171 கோடி மதிப்பில் இலவசங்கள் இருந்தன. பணம், மது, போதைப்பொருள் மற்றும் இலவச பொருட்களை வாக்காளர்களுக்கு, வேட்பாளர்கள் வழங்க கூடாது என்று நாங்கள் அதிகாரிகளுக்கு தெளிவாக அறிவுறுத்தி உள்ளோம். நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதையே நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-mm