இந்தியா-அமெரிக்காவின் கூட்டு ராணுவ பயிற்சியின் 18வது பதிப்பு தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில், சீன எல்லையில் இருந்து 100 கிமீ தொலைவில் நடைபெற்று வருகிறது.
பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் இரு படையினரும் இணைந்து பணியாற்றுவதை மேம்படுத்துதல், போர் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வது உள்ளிட்டவையை நோக்கமாக கொண்டு இந்த கூட்டு பயிற்சி நடைபெறுகிறது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் கூறியுள்ளதாவது: எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு அருகே இந்தியாவும் அமெரிக்காவும் நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சியானது 1993 மற்றும் 1996ல் சீனாவும் இந்தியாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை மீறுவதாகும்.
மேலும் இருதரப்பு நம்பிக்கையை வளர்க்க அழ உதவவில்லை. இது குறித்த தனது கவலையை சீனா, இந்தியா தரப்பிற்கு பகிர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன, இந்திய ராணுவங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
லடாக் எல்லை அருகே சீனாவின் அத்துமீறலை தடுக்க இந்தியா ராணுவத்தை குவித்துள்ளது. சீனாவுடனான இருதரப்பு உறவு வளர்ச்சி அடைய எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைதி முக்கியம் என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-mm