கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் பா.ஜ.க.வின் கொள்ளை தொடர்கிறது: காங்கிரஸ் கடும் தாக்கு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்தாலும், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்கவில்லை.

இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு பத்து ரூபாய் வரை குறைத்திருக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 6 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை 25 சதவிகிதம் குறைந்திருப்பதாகவும், ஆனால் மத்திய அரசோ பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாயைக் கூட குறைக்கவில்லை என்று கூறியுள்ளார். பணவீக்கம் காரணமாக மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையில், பிரதமர் தனது வரி வசூலில் மூழ்கி இருப்பதாக விமர்சித்துள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘மே 16, 2014 அன்று (டெல்லி) – ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 107.09 அமெரிக்க டாலர். பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.71.51, டீசல் விலை ரூ.57.28 ஆக இருந்தது. டிசம்பர் 1, 2022 அன்று – ஒரு பேரல் கச்சா எண்ணெய் 87.55 அமெரிக்க டாலர்களாக இருந்தது.

பெட்ரோல் விலை ரூ.96.72, டீசல் விலை ரூ 89.62 ஆக உள்ளது. கச்சா எண்ணெய் விலையானது 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது, ஆனால் பாஜகவின் கொள்ளை அதிகமாக உள்ளது’ என கூறி உள்ளார்.

 

-mm