கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவி- சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள், கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர். தூத்துக்குடி கடலின் உள்ளே 6 கி.மீ. தொலைவில் 20 மீட்டர் ஆழம் உள்ள இடத்தில், கடல் அலையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் கருவி வைக்கப்பட்டுள்ளது.

இந்த கருவி அடுத்த 3 ஆண்டுகளில், கடல் அலையில் இருந்து 1 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கருவிக்கான பரிசோதனை கடந்த நவம்பர் மாதம் 2-வது வாரத்தில் கடலில் வெற்றிகரமாக நடந்தது.

இது ஐ.நா. மற்றும் இந்தியாவின் இலக்குகளை அடைவதற்கு உதவிகரமாக இருக்கும். மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் 2030-ல் 500 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்தியாவின் பருவநிலை மாற்ற இலக்குகளை எட்ட உதவும். கடல் அலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு துறைகளுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை, சென்னை ஐ.ஐ.டி. கடல்சார் என்ஜினீயரிங் துறை பேராசிரியர் அப்துஸ் சமது வழிநடத்துவார்.

இதுகுறித்து அப்துஸ் சமது கூறுகையில், “54 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், இந்தியாவில் 7 ஆயிரத்து 500 கி.மீ. நீள கடற்கரை உள்ளது. இதன் மூலம் நாட்டின் மின்சார தேவையை பூர்த்தி செய்யமுடியும்” என்றார்.

 

 

-mm